தனித்துப் போட்டி: மாயாவதி அறிவிப்பால் பா.ஜ.,வுக்கு லாபமா?
லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டியிட உள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். "தனித்துப் போட்டி அறிவிப்பால் வாக்குகள் பிரியவே வாய்ப்புகள் அதிகம்" என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
லோக்சபா தேர்தலில் கூட்டணிகளை இறுதி செய்யும் வேலையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஈடுபட்டு வருகிறுது. தொகுதிப் பங்கீடு பணிகளில் 'இண்டியா' கூட்டணியின் தலைவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், உத்தரபிரதேசத்தின் முக்கிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி, தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
இது குறித்து, தனது எக்ஸ் தளத்தில் மாயாவதி பதிவிட்டுள்ளதாவது:
நாங்கள் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப் போவதாகவும் மூன்றாவது அணியை அமைக்கப் போவதாகவும் வெளியான தகவல்கள் அனைத்தும் வதந்தி. உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடுவதால் எதிர்க்கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாகவே அவர்கள் நாள்தோறும் வதந்திகளை பரப்பி, மக்களை திசைதிருப்பும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதில் பகுஜன் சமாஜ் உறுதியாக இருக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மாயாவதியின் இந்த அறிவிப்பு, அரசியல்ரீதியாக பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. லோக்சபா தேர்தலை பொறுத்தவரையில், இதர மாநிலங்களைக் காட்டிலும் உத்தரபிரதேசம் முக்கியமான ஒன்று. இங்கு அதிக தொகுதிகள் இருப்பதால், அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறும் கட்சியே, மத்தியில் ஆட்சி அமைக்கும் என கூறப்படுகிறது.
உத்தரபிரதேசத்தில் 'இண்டியா' கூட்டணியில் சமாஜ்வாடி கட்சி இணைந்துள்ளது. கூடவே, பகுஜன் சமாஜும் இணைந்தால் கூட்டணியின் வலிமை அதிகரிக்கும் என பேசப்பட்டு வந்தது. ஆனால், இதற்கு மாயாவதி தரப்பில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. அவர், மூன்றாவது அணியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் பரவின.
தவிர, 'பா.ஜ., கூட்டணியில் சேரப் போவதில்லை' எனவும் பேசி வந்தார். தற்போது, தனித்துப் போட்டி என்ற முடிவை மாயாவதி எடுத்திருப்பது, பா.ஜ.,வுக்கு பலம் சேர்க்கும் என்ற கருத்து நிலவுகிறது. மேலும், தேர்தலில் பா.ஜ., எதிர்ப்பு ஓட்டுகளை மாயாவதி பிரிக்கும்போது, இண்டியா கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படும் என அரசியல் விமர்சகர்கள் பேச துவங்கியுள்ளனர்.
இதே கருத்தை வலியுறுத்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பிரமோத் திவாரி, 'பா.ஜ.,வை மாயாவதி எதிர்ப்பதாக இருந்தால் அவர் 'இண்டியா' கூட்டணியில் தான் இணைய வேண்டும்' என தெரிவித்திருந்தார். அதற்கு மாறான ஒரு முடிவை மாயாவதி எடுத்திருப்பது, 'இண்டியா' கூட்டணிக்குள் கலக்கத்தை ஏற்படுத்திருக்கிறது.
வாசகர் கருத்து