கருணாநிதி பெயரை எடுத்துவிட்டால் கனிமொழி யார் : அண்ணாமலை காட்டம்
"காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் காலிப் பணியிடங்கள் அதிகமாக உள்ளன, அதை ஏன் அவர்கள் நிரப்பவில்லை?" என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
அண்ணாமலை கூறியதாவது:
பா.ஜ., வேட்பாளர்கள் பட்டியலில் முதல் 195 வேட்பாளர்களை வெளியிட்டுள்ளோம். இரண்டாவது வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளிவரும். தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியாக ஏரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் என சொன்னார்கள், ஆட்சிக்கு வந்து 33 மாதங்கள் கடந்துவிட்டது.
தேர்தல் வாக்குறுதியாக எதையும் தராமல் சிலிண்டருக்கு 400 ரூபாயும், சிலிண்டர் இல்லாதவர்களுக்கு 300 ரூபாய் மானியத்தை நாங்கள் தருகிறோம். எங்கள் மீது குற்றம்சுமத்துவதற்கு முன் தி.மு.க., தனது வாக்குறுதியை படிக்க வேண்டும்.
கடந்த 500 நாட்களில் மத்திய அரசு 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளது. காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் காலிப்பணியிடங்கள் அதிகமாக உள்ளன. அதை ஏன் அவர்கள் நிரப்பவில்லை?
லோக்சபா தேர்தலுக்காக எவ்வளவு பொய் சொல்ல முடியுமோ அதை ராகுல்காந்தி சொல்கிறார். வரும் லோக்சபா தேர்தலில் 400 எம்.பி.,க்களுக்கும் அதிகமாக பெற்று பா.ஜ., மீண்டும் ஆட்சியில் அமரும்.
கனிமொழி அவருடைய அப்பாவின் வீட்டில் உள்ளார். சொந்தமாக சம்பாதித்தாரா? முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் என்பதை வைத்து கொண்டு, வாழ்ந்து கொண்டிருக்கிறார். பிரதமர் மோடியை பற்றி பேசுவதற்கு அவருக்கு எந்த தகுதியும் இல்லை.
கருணாநிதி என்ற பெயரை எடுத்துவிட்டால் கனிமொழி யார்? கனிமொழி கண்ணாடியில், தனது முகத்தை பார்த்துக் கொள்ள வேண்டும். எத்தனை வழக்குகள் அவர் மீது உள்ளன... எத்தனை முறை சிறை சென்றுள்ளார் என்பதை யோசிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து