Advertisement

கேட்டது 4... கிடைத்தது 2 : திருமாவளவன் ஆதங்கம்

தி.மு.க., கூட்டணியில் 2 தனித்தொகுதிகளில் வி.சி., போட்டியிட உள்ளது. '2019 தேர்தலில் கையாளப்பட்ட அதே நடைமுறையில் தொகுதிகளை பகிர்ந்து கொண்டோம்' என, வி.சி., தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

லோக்சபா தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதால், கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில், தி.மு.க., தீவிரம் காட்டி வருகிறது. முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இ.கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ,. கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு முடிவடைந்துவிட்டது.

இன்று காலை ம.தி.மு.க.,வுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில், வி.சி.,க்கு 2 தனித்தொகுதிகளை தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஒதுக்கியுள்ளார். கடந்த 2019 லோக்சபா தேர்தலை போலவே, இந்தமுறையும் சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் வி.சி., போட்டியிட உள்ளது.

அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட பின், திருமாவளவன் கூறியதாவது:

2019 தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் என்ன பகிர்வு முறை கையாளப்பட்டதோ அதே முறையில் தற்போது தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில், 3 தனித் தொகுதிகளையும் ஒரு பொதுத்தொகுதியையும் கேட்டோம். பின், 2 தனித் தொகுதி மற்றும் ஒரு பொதுத்தொகுதி வேண்டும் என, வலியுறுத்தினோம்.

அடுத்தடுத்த நடந்த கலந்தாய்வில் தமிழக, இந்திய அளவிலான சூழல்களை கருத்தில் எடுத்துக் கொண்டோம். கடந்த தேர்தலின் போது எப்படி கட்டுக்கோப்பாக நடந்து கொண்டோமோ, அதே அடிப்படையில் இந்த தேர்தலையும் எதிர்கொள்ளும் வகையில் உடன்பாட்டுக்கு ஒப்புதல் தெரிவித்தோம்.

குறிப்பாக, அனைத்து கூறுகளையும் அலசி ஆராய்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தினோம். தொகுதிகளை வாங்கிக் கொண்டோம் என்பதைவிட பகிர்ந்து கொண்டோம் என்பது தான் நிலவரம். வி.சி., வேட்பாளர்கள் யார் என்பதை உயர்நிலைக்குழு கூடி முடிவு செய்யும். பொதுத்தொகுதி ஒதுக்கப்படாதது குறித்து தி.மு.க., தலைமையிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

தி.மு.க., கூட்டணியில் 2 தனித் தொகுதிகளில் தனிச் சின்னத்தில் போட்டியிட உள்ளோம். பானை சின்னம் கேட்டு, தேர்தல் ஆணையத்தில் 15 நாள்களுக்கு முன்னதாகவே மனு கொடுத்திருக்கிறோம். ஆந்திராவில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட பேச்சவார்த்தை நடக்கிறது.

கர்நாடகா, கேரளாவிலும் போட்டியிடுகிறோம். தென்னிந்திய மாநிலங்களில் போட்டியிட ஏதுவாக பானை சின்னத்தைக் கோரி விண்ணப்பித்திருக்கிறோம். தேர்தல் ஆணையத்திடம் இருந்து பதில் வரவில்லை.

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்