நிறைய இருக்கு... தேர்தல் முடிந்ததும் சொல்வேன்: பா.ஜ., முன்னாள் அமைச்சர் சி.டி.ரவி
''லோக்சபா தேர்தல் முடியட்டும். அதன்பின், நான் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன" என, கர்நாடக பா.ஜ., முன்னாள் அமைச்சர் சி.டி.ரவி கூறினார்.
கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும் தமிழக பா.ஜ., முன்னாள் மேலிட பொறுப்பாளருமான சி.டி.ரவி, நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:
தேச நலன் கருதி பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வேண்டும். மனதிற்குள் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. கட்சி மற்றும் தேசத்தின் நலனுக்காக பல விஷயங்களை விழுங்க வேண்டியுள்ளது. எல்லாவற்றையும் நீண்டநாள் மனதிற்குள் வைத்திருக்க முடியாது.
சட்டசபை தேர்தலுக்குப் பிறகு எல்லோரும் எப்படி நடந்துகொண்டார்கள் என்ற கேள்விகளுக்கு என்னிடம் பதில் இருக்கிறது. உங்களிடம் சொல்வதற்கு நிறைய இருக்கிறது. மாநிலத்தின் 28 லோக்சபா தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். அதற்காக அணிலாக மாறி வேலை பார்ப்பேன்.
லோக்சபா தேர்தல் முடியட்டும். உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னணி என்ன?
பா.ஜ., பா.ஜ., தேசிய பொதுச் செயலராக இருந்த ரவி, பா.ஜ., மாநிலத் தலைவர் பதவியை எதிர்பார்த்தார். மேலிட தலைவர்களும் அனுமதி அளித்து, பொதுச் செயலர் பதவியில் இருந்து விடுவித்தனர். ஆனால், கடைசி நேரத்தில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, தன் மகன் விஜயேந்திராவுக்கு பதவி வாங்கிக் கொடுத்து விட்டார்.
லோக்சபா தேர்தலில் உடுப்பி சிக்கமகளூரு தொகுதியை ரவி எதிர்பார்த்தார். ஆனால், அதிலும் எடியூரப்பா தலையீடு இருந்துள்ளது. மத்திய விவசாய இணை அமைச்சர் ஷோபாவுக்கு 'சீட்' என, எடியூரப்பா கூறி இருப்பது, ரவியின் கோபத்தை கிளறியுள்ளது. இதை எல்லாம் மனதில் வைத்து, ரவி பேசி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாசகர் கருத்து