வாக்குறுதியை ஸ்டாலின் நிறைவேற்றவில்லை: அ.தி.மு.க.,வில் சிம்லா முத்துச்சோழன்
தி.மு.க., முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியனின் மருமகள் சிம்லா முத்துச்சோழன், அ.தி.மு.க.,வில் இணைந்துவிட்டார். 'வாக்குறுதியை ஸ்டாலின் நிறைவேற்றவில்லை' என, குற்றம் சுமத்தியுள்ளார்.
தி.மு.க., முன்னாள் துணைப் பொதுச் செயலாளராக இருந்தவர், சற்குண பாண்டியன். இவரது மருமகள் சிம்லா முத்துச்சோழன், கடந்த 2016 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே.நகரில் போட்டியிட்டார். இந்த தேர்தலுக்குப் பின், தி.மு.க.,வில் இருந்து அவர் ஒதுங்கியே இருந்தார். விரைவில், அவர் அ.தி.மு..,வில் ஐக்கியமாகலாம் என்ற தகவல்களும் வெளிவந்தன.
இந்நிலையில், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமியை இன்று சந்தித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். பின், செய்தியாளர்களிடம் சிம்லா முத்துச்சோழன் கூறியதாவது:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே.நகரில் போட்டியிட்டாலும் தி.மு.க., டெபாசிட்டை இழக்கவில்லை. ஆனால், அடுத்து வந்த இடைத்தேர்தலில் எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. உங்களுக்கு நிச்சயம் வாய்ப்பு வழங்குவேன் என ஸ்டாலின் உறுதி கொடுத்தார். ஆனால், அப்படி எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை. எனக்கு கொடுத்த வாக்குறுதியை ஸ்டாலின் நிறைவேற்றவில்லை.
என் அத்தையும் கணவரும் மறைந்த பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தேன். தி.மு.க.,வில் எந்த அங்கீகாரமும் இல்லாததால் கடும் மனஉளைச்சலில் இருந்தேன். தி.மு.க.,வில் பணம் இருந்தால் தான் மரியாதை. அதனால் தான் தி.மு.க.,வில் இருந்து விலகி அ.தி.மு.க.,வில் இணைந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து