தி.மு.க., கூட்டணியில் யாருக்கு எந்தெந்த தொகுதிகள்?
லோக்சபா தேர்தலில் புதுச்சேரி உட்பட, 23 தொகுதிகளில் தி.மு.க.,வும், மீதமுள்ள, 17 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளும் போட்டியிடுவது குறித்து, நேற்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோக்சபா தேர்தலில் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் வேலையில் தி.மு.க., தலைமை ஈடுபட்டு வருகிறது. தற்போது வரை, முஸ்லீம் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது. இ.கம்யூ., மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ., ஆகிய கட்சிகளுக்கு தலா இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. ஆனால், அக்கட்சிகளுக்கான தொகுதிகள் இறுதி செய்யப்படவில்லை.
காங்கிரஸ், ம.தி.மு.க., வி.சி., ம.ம.க., ஆகிய கட்சிகளுக்கும் எத்தனை இடங்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்நிலையில், சென்னை அறிவாலயத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.பி.,க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்தில் பேசப்பட்ட விவரங்கள் குறித்து, கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: தி.மு.க., மட்டும், 21 தொகுதிகளில் போட்டியிடுவது என்றும், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, தி.மு.க., கணக்கில், 23 தொகுதிகள் சேரும்.
காங்கிரஸ் கட்சிக்கு எட்டு தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திருவள்ளூர், சிதம்பரம் என, இரு தொகுதிகளும் தரப்படும். அக்கட்சிகள் தங்கள் சொந்த சின்னத்தில் போட்டியிடலாம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வடசென்னை, மதுரை; இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகப்பட்டினம் ஒதுக்கலாம் என முடிவாகி உள்ளது.
ம.தி.மு.க.,வுக்கு திருச்சி தொகுதியும், ஒரு ராஜ்யசபா சீட்டும் தரலாம் என்றும், அதேபோல, மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு ராஜ்யசபா சீட் மற்றும் கோவை தொகுதி தரவும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியுடனும், நாளை காங்கிரஸ் கட்சியுடனும் பேச்சு நடத்தப்படுகிறது. இதில், தொகுதிப் பங்கீடு குறித்த உடன்பாடு எட்டப்படலாம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து