அண்ணாமலை - மோடி Vs அமித் ஷா - நட்டா: கூட்டணி கணக்கு என்ன?
அனைத்துக் கட்சிகளும் பரபரப்பாக கூட்டணி பேச்சில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழக பா.ஜ., கிட்டத்தட்ட நிசப்தமாக இருக்கிறது. த.மா.கா.,வுடன் மட்டும்தான் இதுவரை கூட்டணி பேச்சு நடந்து வருகிறது.
கூட்டணியில் சேர ஆவலாக இருக்கும் ஓ.பி.எஸ்., மற்றும் தினகரனை பேச்சுவார்த்தைக்கே அழைக்கவில்லை. கடந்த இரண்டு முறை பிரதமர் தமிழகம் வந்த போதும் அவர்கள் இருவரையும் பார்க்கவில்லை.
அண்ணாமலை சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டும் தேர்தலுக்கு தயாராவதில் ஏன் பா.ஜ., மந்தகதியில் செயல்படுகிறது என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் உள்ளது. அ.தி.மு.க., கூட்டணியை எதிர்பார்த்து பா.ஜ., காத்திருப்பது தான் மந்த நிலைக்கு காரணம் என, ஏற்கனவே பேசப்பட்டு வரும் நிலையில், பா.ஜ., தலைமை இடையே இது பற்றிய கருத்து வேறுபாடு உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மோடி- அமித் ஷா - -நட்டா என்ற மூவரணி தான் கூட்டணி பற்றிய முடிவுகளை பா.ஜ.,வில் எடுக்கிறது. இவர்கள் இடையே, ஒவ்வொருவரும் சில மாநிலங்களுக்கு பொறுப்பு என்ற ஏற்பாடும் உள்ளது.
அதில் தமிழகத்திற்கு பொறுப்பாளர் பிரதமர் மோடி. பல்லடம் பா.ஜ., கூட்டத்தில் பங்கேற்ற மோடி, 1.50 லட்சம் பேர் திரண்டதை பார்த்து மிகவும் உற்சாகமாகிவிட்டார்.
அண்ணாமலை சிறப்பாக கட்சியை வளர்த்துள்ளதாக பாராட்டி, மேடையிலேயே முதுகில் தட்டிக்கொடுத்தார். கூட்டத்திற்கு பின் அண்ணாமலையை தன்னுடன் மதுரைக்கு அழைத்துச் சென்றுவிட்டார். அப்போது, இருவரும் கட்சி பற்றியும் கூட்டணி பற்றியும் நெடுநேரம் பேசினர்.
அண்ணாமலை, பெரிய கட்சியோடு கூட்டணி இருந்தால் பா.ஜ., வளராது என்ற கருத்தை தெரிவிக்கவே, மோடி அதை ஏற்றுக்கொண்டார். கூட்டணி பற்றி முடிவு தெரியாமல் இருப்பதால், கட்சித் தொண்டர்கள் மத்தியில் குழப்பமும் அதிருப்தியும் இருப்பதாக அண்ணாமலை தெரிவித்தார்.
அதற்கு, 'அமித் ஷா மற்றும் நட்டா அ.தி.மு.க., கூட்டணியை விரும்புகின்றனர். கூட்டணி சேர்ந்தால், குறைந்தபட்சம் 20 சீட் ஜெயிக்க வாய்ப்பு இருக்கிறது என்கின்றனர். அதை விட அவர்களுக்கு மனம் இல்லை' என்று பிரதமர் சொன்னார்.
அமித் ஷா, அ.தி.மு.க.,வை இழுக்க தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். நிர்மலா சீதாராமன் ஏற்பாட்டில், எடப்பாடி பழனிசாமியின் உறவினர்கள் மற்றும் மூத்த முன்னாள் அமைச்சர்கள் வாயிலாக பேச்சு நடக்கிறது. ஆனால், பழனிசாமி அசைந்து கொடுக்கவில்லை.
நெருங்கி வருவதுபோல் வந்துவிட்டு, 'பா.ஜ.,விற்கு நான்கு சீட் தான் தருவேன். 2026ல் என்னை முதல்வர் வேட்பாளராக பா.ஜ., ஏற்று அறிவிக்க வேண்டும்' என்று சொல்லி பா.ஜ.,விற்கு எரிச்சல் ஏற்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
தேர்தல் அறிவிப்பு வரும் வரை இந்த முயற்சி தொடரும் என தெரிகிறது. பிரதமர் மோடி, 'அ.தி.மு.க.,வின் வரமாட்டார்கள். பழனிசாமிக்கு அவ்வளவு மரியாதை செய்தும்; அவர் விலகி நிற்கிறார் என்றால், அவர்கள் வரமாட்டார்கள் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். இருந்தாலும், அமித் ஷா முயற்சி செய்யட்டும். அதை நான் தடுக்க விரும்பவில்லை' என்றும் சொல்லி இருக்கிறார்.
அதனால்தான், பல்லடம், துாத்துக்குடி, நெல்லை, சென்னை என எந்த கூட்டத்திலும் அ.தி.மு.க.,விற்கு எதிராக பிரதமர் பேசவே இல்லை எனக் கூறப்படுகிறது.
வாசகர் கருத்து