'இல்லாதது பொல்லாததை சொல்கிறாய்' பிரதமரை ஒருமையில் பேசிய அமைச்சர்
தி.மு.க., பொதுக்கூட்டத்தில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடியை ஒருமையில் பேசியதுடன், 'தி.மு.க.,வை தொட்டு பார்க்க முடியுமா' என, சவால் விடுத்தார்.
திருச்செந்துாரில் நடந்த பொதுக்கூட்டத்தில், அவர் பேசியதாவது:
சிலர் தி.மு.க.,வை அழித்து விடுவோம் என்கின்றனர். பா.ஜ., தலைவர்கள் உருட்டலுக்கு, முதல்வர் பயப்படவில்லை. மாநில அரசுக்கு இடர்பாடுகளை ஏற்படுத்தும்போது, முதலில் குரல் கொடுக்கிறார். பல்வேறு வகையில், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை என, கொடுமை செய்து வருகின்றனர்.
கருணாநிதி போல் முதல்வர் ஸ்டாலின் செயல்படுகிறார். அவர் கை காட்டுபவரே பிரதமர் என்ற நிலையை உருவாக்கி உள்ளார். 'இண்டியா' கூட்டணி ஆட்சிக்கு வரும். யாராவது அரை, கால் சங்கியாக இருந்தால், அவர்கள் மாறிக் கொள்ள வேண்டும்.
அமைச்சர் உதயநிதி, மத்திய அரசை பிடி பிடி என சாடுகிறார். அவர்கள் பதில் கூற முடியாமல் திணறுகின்றனர். கனிமொழி கேட்கும் ஒரு கேள்விக்கும், அவர்களால் பதில் கூற முடியவில்லை. மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்துவதற்காக பிரதமர் மோடி துாத்துக்குடி வந்தார். அந்த சமயத்தில், நிகழ்ச்சிக்காக ஒரு விளம்பரம் கொடுத்தேன்.
விளம்பரத்தை டிசைன் செய்தவன் தவறு செய்து விட்டேன். அதை வைத்து, அரசியல் பண்றியேடா... பாரதப் பிரதமராக இருந்து கொண்டு. அண்ணாமலையிடம் இங்கு வா; தேர்தலில் துாத்துக்குடியில் நில். நீ டிபாசிட் வாங்கி விட்டால், நான் அரசியலை விட்டு போகிறேன் என, சவால் விட்டேன்.
அந்த கோபம் அண்ணாமலைக்கு. அந்த கோபத்தில் பிரதமரிடம் சீண்டி விடுகிறான். பிரதமருக்கு ஒன்றும் தெரியாது; அவரை சீண்டி விடுகிறான். என்ன சீண்டினால் என்ன? எங்களை துாக்கில் போடுவீர்களா; நாடு கடத்தி விடுவீர்களா; அதெல்லாம் ஒன்றும் நடக்காது..
அரசு விழாவில், ஒரு பிரதமர் நாட்டில் என்ன செய்தேன்; என்ன செய்யப் போகிறேன் என்பதை பேச வேண்டும். அதை விட்டுவிட்டு, எங்கள் மாநில அரசை இல்லாதது பொல்லாததை சொல்கிறாய் என்றால், நீ ஒரு பிரதமரா?
அதற்கு உனக்கு தகுதி இருக்கா; நீ அரசு விழாவில் பேசு; இல்லை உன் கட்சி விழாவில் பேசு. தி.மு.க.,வை அழித்து விடுவேன் என்கிறாய். அழித்து விட முடியுமா; தொட்டுப் பார்க்க முடியுமா?
தமிழகத்தில் பா.ஜ., உள்ளதா? இங்குள்ள பையன்கள் நகராட்சியில் நல்ல வேலை செய்தால், அதை மறிக்க கொடி பிடித்து வருவான். ஏதேனும் இடத்தில் தண்ணீர் தேங்கி இருந்தால் கொடி பிடிப்பான்.
நாங்கள் ஹிந்து என்கிறாய். திருச்செந்துார் கோவிலில், 300 கோடி ரூபாய்க்கு பணிகள் நடக்கின்றன. அமைச்சர் சேகர்பாபு கோவில் கோவிலாக செல்கிறார். அனேகமாக சாமியார் ஆகி விடுவார் என நினைக்கிறேன். நீ ஏதேனும் குறை சொல்ல முடியுமா?
பழனிசாமியை பற்றி பேச வேண்டியதில்லை. இதோடு அந்த கட்சி 'அவுட்'. தேர்தலுக்கு பின் கட்சி இருக்குமா எனத் தெரியவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
துப்பில்லாத அமைச்சர்!
ஒரு விளம்பரத்தை கூட ஒழுங்கா போடத் துப்பில்லாத அமைச்சர் நீ. ஒரு டிசைனை கூட சரிபார்க்க வக்கில்லாத அமைச்சர் நீ. வேற்று நாட்டின் கொடியை பதிந்து துரோகம் செய்ததோடு, பிரதமரை ஒருமையில் பேசுவது தவறு என்றுகூட தெரியாமல், வெட்கமில்லாம அமைச்சரா இருக்கியேடா நீ?
நாராயணன் திருப்பதி,
துணைத்தலைவர், தமிழக பா.ஜ.,
வாசகர் கருத்து