அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தவர் குறுக்கே நிற்கும் அமைச்சர்களால் குமுறல்
அரசியலில் தங்களுக்கு போட்டியாக வந்து விடுவார் என்பதற்காக, தமிழகத்தில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திண்டுக்கல் தி.மு.க., - எம்.பி., வேலுச்சாமிக்கு மீண்டும் சீட் வழங்க அமைச்சர்களே முட்டுக்கட்டையாக இருப்பதாக எம்.பி.,யின் ஆதரவாளர்கள் புலம்புகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் ஐ.பெரியசாமி. ஆத்துார் சட்டசபை தொகுதியில் ஆறு முறை வெற்றி பெற்றவர். இன்னொரு அமைச்சர் சக்கரபாணி. ஒட்டன்சத்திரம் சட்டசபை தொகுதியில் தொடர்ந்து ஆறு முறை வெற்றி பெற்றவர்.
கட்சியில் அறிமுகம் இல்லாத, பெங்களூரில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்த வேலுச்சாமி, இவர்களின் ஆதரவில்தான் 2019 தேர்தலில் தமிழகத்திலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்திய அளவில் இரண்டாம் இடமும் பெற்றார்.
நம்பிக்கை
இருப்பினும் தன்னை உருவாக்கிய இரு அமைச்சர்கள், ஐ.பெரியசாமியின் மகனும் பழனி தொகுதி எம்.எல்.ஏ.,வுமான ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர், வேலுச்சாமியை சுதந்திரமாக செயல்பட விடவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், தொகுதிக்கு வேலுச்சாமி குறிப்பிடத்தக்க அளவில் எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இந்த நிலையில்தான், மீண்டும் லோக்சபா தேர்தலில் போட்டியிட வேலுச்சாமி விருப்ப மனு கொடுத்து உள்ளார். அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற முத்திரை, தன்னை இந்த முறை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையிலும் அவர் உள்ளார். ஆனால் அமைச்சர்கள் வேறு விதமாக நினைக்கின்றனர் என்கின்றனர் எம்.பி., ஆதரவாளர்கள்.
தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை காட்டி, சீட் கொடுப்பதில் முட்டுக்கட்டை போடுவதாகவும், ஆனால் உண்மையில், வேலுச்சாமி தங்களை விடப் பெரிய ஆளாக கட்சியில் வளர்ந்து விடுவார், அரசியலில் தங்களுக்கு போட்டியாக வந்து விடுவார் என்ற அச்சமே காரணம் எனவும் எம்.பி., ஆதரவாளர்கள்குமுறுகின்றனர்.
அமைச்சர்களின் ஆதரவாளர்களோ, 'அவர் எங்கே அமைச்சர்களுக்கு போட்டியா வர்றது? முதலில் தொகுதிக்கு வரச்சொல்லுங்க' என்கின்றனர்.
முழு செலவு
கடந்த 2019ல் தேர்தலின் போது தி.மு.க., தரப்பில் வேலுச்சாமி அல்லது மாவட்ட பொருளாளரான விஜயன் இருவரில் ஒருவரை வேட்பாளராக நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.
கட்சியில் பல ஆண்டுகள் அனுபவம், பொறுப்பில் இருந்தாலும் கூட விஜயனால் தேர்தல் செலவிற்காக நிதி ஏற்பாடு செய்ய முடியவில்லை. வேலுச்சாமி, வாய்ப்பை பெற்றார். அதனால் இந்த முறை மாவட்ட கவுன்சிலராக உள்ள விஜயனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தி.மு.க.,வினர் கூறுகின்றனர்.
நத்தம் பேரூராட்சி தலைவராக உள்ள தி.மு.க.,வைச் சேர்ந்த தொழிலதிபரான சேக் சிக்கந்தர் பாட்ஷா 'தேர்தல் முழு செலவையும் நான் பார்த்துக் கொள்கிறேன். எனக்கு சீட் கொடுங்கள்' என விருப்பமனு கொடுத்து உள்ளார்.
அமைச்சர்களின் ஆதரவும் பரிந்துரையுமே இந்த முறையும் வேட்பாளரை நிர்ணயிக்கும் என்பதால், திண்டுக்கல் லோக்சபா தொகுதிக்கு யார் வேட்பாளர் என்ற பரபரப்பு கட்சியினரிடையே அதிகரித்துள்ளது.
வாசகர் கருத்து