தமிழக பா.ஜ., வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியீடு: வானதி சீனிவாசன் பதில்
''எங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை, மக்களை சந்திக்க தயாராக உள்ளோம். மக்கள் பா.ஜ.,விற்கு வாக்களிக்க தயாராக இருக்கின்றனர்,'' என, பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறினார்.
லோக்சபா தேர்தல் குறித்து தமிழக பா.ஜ., மையக்குழு கூட்டம், , கமலாலயத்தில் இன்று காலை நடந்தது. இதில், மத்திய அமைச்சர் முருகன், மாநில தலைவர் அண்ணாமலை, சட்டசபை குழு பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பின், வானதி சீனிவாசன் அளித்த பேட்டி:
வருகின்ற லோக்சபா தேர்தலில் தமிழகத்தில், யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என, ஒவ்வொரு தொகுதிக்கும் கட்சி தலைமையில் இருந்து 2 நிர்வாகிகள் நாளைக்கு அனுப்பப்பட இருக்கிறார்கள். யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று தொகுதிகளில் உள்ள நிர்வாகிகள் கருத்துகளை தெரிவிக்கலாம்.
அந்த நிர்வாகிகள், தங்கள் பட்டியலை மாநில தேர்தல் குழுவிடம் வழங்குவார்கள். அந்தக் குழுவினர், உத்தேசிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலுடன், வருகின்ற 6ம் தேதி டில்லி கூட்டத்தில் கலந்துகொள்வார்கள்.
முதல் கட்டமாக, பல மாநிலங்களை சேர்ந்த, 195 வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதில், தமிழகத்தில் இருந்து மட்டும் வேட்பாளர்கள் இடம் பெறவில்லை. பீஹார், கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் இருந்தும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. எனவே, தமிழகத்திற்கு மட்டும் தனியாக தாமதம் ஆகவில்லை .
கூட்டணி கட்சிகள், எந்தந்த சின்னத்தில் போட்டியிடலாம் என்பதை தேசிய தலைமை முடிவு செய்யும். எங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை, மக்களை சந்திக்க தயாராக உள்ளோம். மக்கள் பா.ஜ.,விற்கு வாக்களிக்க தயாராக இருக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து