காங்கிரஸ் கட்சிக்கு கைகூடாத திருப்பூர்
திருப்பூர் லோக்சபா தொகுதி துவங்கியது முதல், காங்கிரசுக்கு 'கை'கூடவில்லை. திருப்பூரின் முதல் எம்.பி.,யை தேர்வு செய்ய, 2009ல் நடந்த தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட சிவசாமி வெற்றி பெற்றார். தி.மு.க., கூட்டணியில், காங்., சார்பில் களமிறங்கிய கார்வேந்தன், 2.10 லட்சம் ஓட்டுகளை பெற்று இரண்டாமிடம் பெற்றார்.
கடந்த 2014 தேர்தலில் காங்கிரஸ் தனித்து களம் கண்டது. மாநில தலைவராக இருந்த இளங்கோவன், 47,000 ஓட்டுகளை பெற்று, நான்காமிடம் தான் பெற முடிந்தது. அத்தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க., வேட்பாளர் சத்தியபாமா பெற்ற ஓட்டுகள் 4.42 லட்சம்.
இதன்பின், 2019 தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் இணைந்த காங்கிரஸ், திருப்பூர் தொகுதியைகேட்ட போதும் ஒதுக்கப்படவில்லை. இந்திய கம்யூ., வேட்பாளர் சுப்பராயன் வெற்றி பெற்றார். 'சீட்' ஒதுக்கப்படாத நிலையில், காங்., சார்பில் முன்னர் போட்டியிட்ட கார்வேந்தனோ பா.ஜ.,வில் ஐக்கியமாகி விட்டார்.
வரும் லோக்சபா தேர்தலில், திருப்பூரில் தி.மு.க., கூட்டணியில், இந்திய கம்யூ., மீண்டும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. காங்கிரசுக்கு 'சீட்' ஒதுக்கப்படுமா என்ற கேள்வி கூட எழவில்லை.
'லோக்சபா தேர்தலில் மட்டுமல்ல; சட்டசபை தொகுதிகளில் கூட, திருப்பூர் தெற்கு, வடக்கு உள்ளிட்டவை காங்கிரசுக்கு எட்டாக்கனியாகவே உள்ளன' என்று காங்கிரஸ் பிரமுகர்கள் ஆதங்கப்படுகின்றனர். இருந்தபோதும், லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்கு கூட்டணி கட்சி வேட்பாளருடன் செல்வதற்கு, காங்., நிர்வாகிகள் தற்போதே தயாராகி வருகின்றனர்.
வாசகர் கருத்து