கோவையில் ரஜினி மருமகன் போட்டி? கம்யூ., உடன் மல்லுக்கட்டும் தி.மு.க.,
வரப்போகும் லோக்சபா தொகுதியில், கோவை தொகுதியில், நடிகர் ரஜினியின் மருமகன் விசாகனை களமிறக்க வேண்டும் என தி.மு.க., நிர்வாகிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஆனால், அந்தத் தொகுதியைக் கேட்டு மா.கம்யூ., அடம் பிடித்து வருகிறது. தொகுதி யாருக்கு கிடைக்கும் என்பதில் குழப்பம் நிலவி வருகிறது.
சட்டசபை தேர்தலில் பா.ஜ.,விடம் தோற்றதற்கு பழி தீர்க்க வேண்டும் என்பதற்காக, மீண்டும் கோவையில் போட்டியிட விருப்பம் தெரிவித்து தி.மு.க., கூட்டணியின் தயவை, ம.நீ.ம., கமல் நாடி உள்ளார்.
நட்பு ரீதியான நெருக்கம் காரணமாக, அரசியலுக்கு அப்பாற்பட்டு, கமலுக்கு கோவையை ஒதுக்க, உதயநிதி விரும்புகிறார். ஆனால், கடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., ஆட்சி மீதான அதிருப்தி ஓட்டுகளை கமல் கட்சி வேட்பாளர்கள் பிரித்ததால் தான், ஒரு தொகுதியில் கூட தி.மு.க., வெற்றி பெறவில்லை என்பதை, அக்கட்சி தலைமை உறுதியாக நம்புகிறது.
வழியில்லை
தி.மு.க., தோல்விக்கு காரணமாக இருந்த கமலுக்கு, கோவையை ஒதுக்கி, அவருக்காக தி.மு.க., தொண்டர்களை உழைக்க சொல்லி நிர்ப்பந்திப்பது சரியல்ல என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை கூறியுள்ளனர்.
இதன் காரணமாகவே, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தி.மு.க., நிபந்தனை விதிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு உடன்பாடு இல்லையெனில், காங்கிரசுக்கு ஒதுக்கும் தொகுதிகளில், உள்ஒதுக்கீடு பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கமலின் கதை இப்படி இருக்க, மா.கம்யூ., கட்சி வேறு வியூகம் வகுத்து வருகிறது. கோவை தொகுதியில், அக்கட்சியின் நடராஜன்தான் தற்போதைய எம்.பி., அதனால், அந்தத் தொகுதிதான் மீண்டும் தங்களுக்கு வேண்டும் என அக்கட்சி அடம் பிடித்து வருகிறது.
இதுகுறித்து மா.கம்யூ., நிர்வாகிகள் கூறியதாவது:
கோவை லோக்சபா தொகுதியில், இதுவரை 4 முறை இந்திய கம்யூ., 3 முறை மார்க்சிஸ்ட் கம்யூ., வெற்றி பெற்றிருக்கிறது. தொகுதியை மாற்றுவதற்கு வழியில்லை என, தி.மு.க., தலைமையிடம் திட்டவட்டமாக கூறி விட்டோம்.
ஏனெனில், கோவை கம்யூ., கட்சிகளுக்கு அடித்தளமிக்க தொகுதி. கோவை தொகுதியை கொடுக்கும் இடத்திலும், தீர்மானிக்கும் இடத்திலும் தி.மு.க.,வே உள்ளது.
கமல் எங்கு வேண்டுமானாலும் போட்டியிட முடியும். ஆனால், தமிழகத்தில் கம்யூ., கட்சிகளுக்கு சில இடங்களில் மட்டுமே அடித்தளம் உள்ளது. அதனால், கோவையை மீண்டும் பெற கம்யூ., சார்பில் கடும் அழுத்தம் கொடுக்கப்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
இவர்கள் இருவரும் கோவையைக் குறிவைக்க, தி.மு.க., நிர்வாகிகளின் எண்ணம் வேறு விதமாக உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் கோவையின் 10 தொகுதிகளிலும் தி.மு.க., தோல்வியை தழுவியது. அதனால், இந்த முறை அத்தொகுதியிலேயே போட்டியிட்டு, கடந்த மூன்றாண்டு ஆட்சிக்கு கிடைத்த சான்றாக வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூறி வருகின்றனர். வேட்பாளரையும் அவர்களே பரிந்துரைத்துள்ளனர்.
கிடைக்குமா ஆதரவு
இதுகுறித்து தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
கோவையை இம்முறை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்காமல், தி.மு.க.,வே நேரடியாக போட்டியிட வேண்டுமென தலைமையிடம் வலியுறுத்தியுள்ளோம். தி.மு.க.,வை சேர்ந்த மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ., பொன்முடியின் சகோதரர் வணங்காமுடியின் மகன் விசாகன், நடிகர் ரஜினியின் மருமகன். பாரம்பரிய தி.மு.க., குடும்பம். அதனால், விசாகனை தி.மு.க., வேட்பாளராக களமிறக்கினால், ரஜினியின் ஆதரவும் கிடைக்கும் என்பதை தெரிவித்திருக்கிறோம்.
கடந்த முறை வெற்றி பெற்ற மா.கம்யூ., சிறப்பாக செயல்படாததால், மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் பிரிந்திருப்பதால், ஆளுங்கட்சிக்கான எதிர்ப்பு ஓட்டுகள் சிதறி விடும். என்னதான் அதிருப்தி நிலவினாலும், கூட்டணி பலத்தோடு எளிதாக வெற்றி பெறலாம் என கணக்குபோட்டு, தொகுதியை மா.கம்யூ., மீண்டும் கேட்கிறது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மா.கம்யூ., ம.நீ.ம., மற்றும் சொந்தக் கட்சி ஆகிய மூன்று தரப்புகளில் இருந்தும் அழுத்தம் அதிகரித்து வருவதால், கோவை தொகுதியை ஒதுக்குவதில் இழுபறி நேரலாம் என்கின்றன கட்சி வட்டாரங்கள்.
வாசகர் கருத்து