தப்பியோடிய அ.தி.மு.க., புலி எது?
வடசென்னையில் திருவொற்றியூர், காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கத்தில், முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சி நடந்தது. இதில் தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்று பேசியதாவது:
கடந்த 1958ல், தி.மு.க., தோன்றி சந்தித்த முதல் தேர்தலில், 'தி.மு.க.,வை அது விரும்புகிற நாட்டிற்கு மூட்டைக்கட்டி அனுப்புவேன்' என்றார் நேரு. ராஜாஜி, 'மூட்டை பூச்சியை நசுக்குவது போல் நசுக்கி விடுவேன்' என்றார்.
கடந்த 1962ல், 50 இடங்களில் வெற்றி பெற்றவுடன், இந்தியாவில் அரசியல் கட்சியை தடை செய்ய சட்டம் கொண்டு வரப்பட்டது. எமர்ஜென்சி காலத்தில், பா.ஜ.,வின் முந்தைய ஜனசங்கத்தை கலைத்தனர்.
அன்று முதல் இன்று வரை, 67 ஆண்டுகள், தி.மு.க., என்ற பெயரில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வருகிறோம்.
கடந்த லோக்சபா தேர்தலில், 34 சதவீதம் ஓட்டு வாங்கிதான், மோடி பிரதமராக பதவி வகிக்கிறார். மீதமுள்ள 66 சதவீதம் ஓட்டு பா.ஜ.,விற்கு எதிரான ஓட்டு. அவற்றை ஒருங்கிணைத்து 'இண்டியா' கூட்டணி வெற்றி பெற நேரம் வந்துவிட்டது.
லோக்சபா தேர்தல் நெருங்க நெருங்க, பிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டது. அதனால்தான் இண்டியா கூட்டணிக்கு வித்திட்ட தமிழக முதல்வர் ஸ்டாலினையும், தி.மு.க.,வையும் தாழ்த்தி பேசி வருகிறார்.
எங்களை அழிப்பேன் என மோடி பேசியிருக்கிறார். அவர், தமிழகம் வரும் போதெல்லாம், தி.மு.க.,விற்கு, 5 சதவீதம் ஓட்டு வங்கி அதிகரிக்கும்.
அவர் தமிழகம் வந்ததற்கான காரணமே, அ.தி.மு.க.,வின் மூன்று புலிகளை பிடிக்கத்தான். அதில், ஒரு புலி தப்பியோடிவிட்டது. இங்க நான் புலின்னு சொன்னது புள்ளின்னு வெச்சுக்கங்க. அந்த புள்ளிங்க யாருன்னு உங்களுக்கே தெரியும். ஆனா, எங்கள் கட்சியின் அடிமட்ட தொண்டனை கூட பா.ஜ.,வால் இழுக்க முடியாது.
வேட்பாளர் யாராக இருந்தாலும், ஸ்டாலினே போட்டியிடுகிறார் என கட்சியினர், வேலை பார்க்க வேண்டும்.
இண்டியா கூட்டணி, 300க்கும் அதிகமான இடங்களை பிடிக்கும். பா.ஜ., 116 இடங்களை மட்டுமே பிடிக்க வாய்ப்புள்ளது.
திராவிட கட்சிகளை வேப்பங்காயாக கருதும் 'தின மலர்'நாளிதழ், இந்தாண்டு பட்ஜெட்டை பாராட்டி உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
மூன்று புள்ளிகள் யார் என்று வெளிப்படையாக ஆர்.எஸ்.பாரதி சொல்லாத நிலையில், அவரைத் தொடர்பு கொண்டு கேட்டோம்.
அவர் கூறியதாவது:
தேனி முன்னாள் அ.தி.மு.க., எம்.பி.,யான பார்த்திபன். முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோரைத்தான் மூன்று புள்ளிகளாகவும்; புலிகளாகவும் தேடி வந்தார் பிரதமர் மோடி. இந்த விஷயம் எப்படியோ, அ.தி.மு.க.,வுக்கு முன்கூட்டியே தெரிந்து விட்டது.
பார்த்திபன், தேனியில் இருந்து கிளம்பி வந்து விட்டார். இது தெரிந்ததும், முன்னாள் அமைச்சர் உதயகுமார் பாய்ந்தோடிச் சென்று, அவரைத் தடுத்து விட்டார். ஆக, ஒரு புள்ளி தப்பி விட்டது. மற்ற இருவரைப் பற்றியும் சொல்லவே வேண்டாம்.
இவ்வாறு பாரதி கூறினார்.
வாசகர் கருத்து