'லோக்சபா தேர்தல் முடியும் வரை எனக்கு 2 மணி நேரமே தூக்கம்!'
அதிகாலை வரை நடந்த கூட்டத்தில் மோடி'தேர்தல் முடியும் வரை, தினமும் இரண்டு மணி நேரம் மட்டுமே, எனக்கு துாங்க நேரம் கிடைக்கும்' என்கிறார், பிரதமர் மோடி.
லோக்சபா தேர்தல் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக, பா.ஜ., மத்திய தேர்தல் குழு கூட்டம், டில்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில், நேற்று முன்தினம் நடந்தது. 17 மாநிலங்களை சேர்ந்த, 130 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டன.
இதில், 17 மாநில பா.ஜ., தலைவர்கள், அமைப்பு பொதுச்செயலர்கள்,முதல்வர்கள், மேலிட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். இதற்காக, அவர்கள் அனைவரும் இரவு 8:00 மணிக்கே, பா.ஜ., அலுவலகம் வந்து விட்டனர். ஆனாலும், இரவு 11:00 மணிக்கு பிரதமர் மோடி வந்த பின் தான் கூட்டம் துவங்கியது.
சால்வை அணிவித்து, ரோஜா மலர் கொடுத்து மோடியை வரவேற்ற, கட்சி தலைவர் நட்டா, மோடி சோர்வாக இருப்பது பற்றி விசாரித்துள்ளார்.
அதற்கு மோடி, 'நமக்கு வேலை தான் முக்கியம். காலையில் பீஹார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் செல்ல வேண்டும். துாங்குவதற்கு இரண்டு மணி நேரம் மட்டுமே கிடைக்கும். தேர்தல் முடியும் வரை துாக்கம் குறைவு தான்' என்று கூறி உள்ளார்.
அதை தொடர்ந்து, மாநில தலைவர்கள் தங்கள் மாநிலத்தில் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்களின் பெயர்களை தொகுதி வாரியாக வாசிக்க, அது பற்றிய விவாதம் நடந்துள்ளது. ஒவ்வொரு வேட்பாளரின் பெயர் வாசிக்கப்பட்ட போதும், பிரதமர் மோடி குறுக்கிட்டு, அந்த தொகுதியின் சமூக, பொருளாதார சூழல்கள், கடந்த தேர்தல்களில் பெற்ற ஓட்டுகள் பற்றி விசாரித்துள்ளார்.
'இந்த வேட்பாளருக்கு வெற்றி கிடைக்குமா; ஏற்கனவே ஜெயித்தவரை ஏன் நிறுத்தவில்லை; இந்த தொகுதியில் பெண் ஒருவரை நிறுத்தியிருக்கலாமே?' என, அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். அதன்பின்னரே, வேட்பாளர் இறுதி செய்யப்பட்டுள்ளார்.
அதிகாலை 4:00 மணி வரை, தொடர்ந்து 5 மணி நேரம் நடந்த வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் இடையிடையே மோடி கூறியதாவது:
கருத்துக் கணிப்புகளைப் பார்த்து, எப்படியும் நாம் தான் வெற்றி பெறப் போகிறோம் என அசட்டையாக இருந்து விடக்கூடாது. 2014, 2019 தேர்தல்களை விட அதிக கவனத்துடன், அதிக எச்சரிக்கையுடன், அதிக நேரம் செலவழித்து கடுமையாக உழைக்க வேண்டும்.
ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு தொகுதியிலும் சூழ்நிலை மாறுபடும். மக்களின் மன நிலை, தேவைகள் வேறாக இருக்கும். அதை புரிந்து, தேர்தல் பணியாற்ற வேண்டும்.இவ்வாறு அவர் அறிவுறுத்தியதாக தெரிகிறது.
தமிழக கூட்டங்கள்: ஆர்வத்துடன் விசாரித்த மோடிவேட்பாளர் தேர்வு கூட்டம் முடிந்ததும், பா.ஜ., மகளிரணி தேசியத் தலைவர் வானதி, தமிழக பா.ஜ., இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோரை அழைத்த மோடி, 'இரண்டு நாட்கள் தான் பங்கேற்ற நிகழ்ச்சிகளுக்கு, மக்களிடம் எந்த அளவுக்கு வரவேற்பு உள்ளது?' என்று கேட்டுள்ளார்.
அவர்கள், 'தமிழகத்தில் 2019 போல சூழல் இப்போது இல்லை. தமிழ், தமிழ்நாடு, தமிழ் மக்கள் பற்றி நீங்கள் தொடர்ந்து பேசுவது, அரசியலுக்காக அல்ல என்பதை, தமிழக மக்கள் உணரத் துவங்கியிருக்கின்றனர். ஹிந்தி மொழி புரியாவிட்டாலும், உங்களின் பேச்சு மக்களை கவர்ந்துள்ளது. தமிழகம் மாற்றத்திற்கு தயாராகி விட்டது' என்று பதில் அளித்துள்ளனர்.
வாசகர் கருத்து