கை நழுவிய கரும்பு விவசாயி: சின்னத்தால் சீமானுக்கு சோதனை
கரும்பு விவசாயி சின்னம் கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 'சின்னத்தை மாற்றிவிடுங்கள்' என தலைமை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்ய கோரி தலைமை தேர்தல் கமிஷனில் அக்கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டில்லி உயர்நீதிமன்றத்திலும் நாம் தமிழர் கட்சி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று (மார்ச் 1) டில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மன்மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில், ''விதிமுறைகள் அடிப்படையில் மட்டுமே சின்னங்கள் ஒதுக்கப்படுகின்றன. பொது சின்னத்துக்கு யாரும் உரிமை கோர முடியாது. நாம் தமிழர் கட்சி சார்பில் தாமதமாக விண்ணப்பிக்கப்பட்டது'' என வாதிடப்பட்டது.
நாம் தமிழர் கட்சி தரப்பில், ''கரும்பு விவசாயி சின்னம் வழங்காதது தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்'' என வாதிடப்பட்டது. இதனையடுத்து நீதிபதி மன்மோகன், ''நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட கட்சியே அல்ல; பின்னர் எவ்வாறு கோரிக்கை வைக்க முடியும்?தேர்தல் ஆணையத்தின் பதில், விதிகள் அடிப்படையில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவகாசம் வழங்கினாலும், முதலில் விண்ணப்பித்தவர்களுக்கு சின்னம் வழங்கப்பட்டுள்ளது'' என்றார்.
மேலும், ''6 சதவீத ஓட்டுகள் என்பது பெரும் எண்ணிக்கை தான். சின்னம் இல்லையென்றால் சில நேரங்களில் அவர்களின் எதிராளிகளுக்கு சாதகமாகிவிடும்'' எனக் கூறி எழுத்துப்பூர்வ உத்தரவு பிறப்பிப்பதற்காக வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
வாசகர் கருத்து