தி.மு.க., உடன் தோழமையோடு இருக்கிறோம் : செல்வப்பெருந்தகை புது விளக்கம்
"தி.மு.க.,வுடன் தோழமையோடு இருக்கிறோம்; திமிராக நடந்து கொள்ளவில்லை" என, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.
லோக்சபா தேர்தலில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் பணியில் தி.மு.க., நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை கொ.ம.தே.க., ஐ.யூ.எம்.எல், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவற்றுக்கான இடங்கள் உறுதி செய்யப்பட்டுவிட்டன. காங்., ம.தி.மு.க., வி.சி., ஆகிய கட்சிகளுடன் தி.மு.க., நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
கடந்த லோக்சபா தேர்தலில் புதுச்சேரியுடன் சேர்த்து பத்து இடங்களில் தமிழக காங்., போட்டியிட்டது. இந்தமுறை ஏழு இடங்களை ஒதுக்குவதற்கு தி.மு.க., முன்வந்ததாக கூறப்பட்டது. 'பத்துக்கும் குறைவாக இடங்களை வாங்கினால், டெல்லி மேலிடத்துக்கு பதில் சொல்ல முடியாது' என்பதால் தி.மு.க.,வின் கோரிக்கையை காங்., நிர்வாகிகள் ஏற்கவில்லை.
இது குறித்து தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், 'கூட்டணிக்காக யாரிடமும் கெஞ்சியது கிடையாது' என்றார். இதன்மூலம், தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்குள் உரசல் ஏற்பட்டுவிட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள செல்வப்பெருந்தகை, "தமிழகத்தில் புதுமையான பல திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார். காங்கிரஸ் சார்பில் மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கு தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வரவுள்ளார். காங்., தி.மு.க., கூட்டணி வலிமையாக உள்ளது.
2024 லோக்சபா தேர்தலிலும் வெற்றி பெறுவோம். தி.மு.க.,வுடன் நாங்கள் தோழமையாக இருக்கிறோம்; திமிராக நடக்க வாய்ப்பில்லை. இந்தக் கூட்டணிக்கு ஸ்டாலின் தான் தலைவர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
வாசகர் கருத்து