தொகுதிப் பங்கீட்டில் தி.மு.க., அவசரம் காட்டியது ஏன்: ஜெயக்குமார் கேள்வி
' எந்தெந்த கட்சிகள் எங்கு செல்லும் என்பது இன்னும் பத்து நாள்களில் தெரிந்துவிடும்' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
ஜெயக்குமார் கூறியவதாவது:
அ.தி.மு.க., மீதான அச்சத்தால் தொகுதிப் பங்கீட்டை தி.மு.க., அவசரம் அவசரமாக முடிக்கிறது. இது ஒருவகையில் தோல்வி பயம் தான். தி.மு.க.,வை விட்டால் அடுத்த ஆப்ஷனாக அ.தி.மு.க., பக்கம் சென்றுவிடுவார்கள் என தி.மு.க., பயப்படுகிறது.
கத்திரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வந்து தானே ஆக வேண்டும் என பழமொழி ஒன்றை சொல்வார்கள். இன்னும் பத்து நாள்களில் எந்தெந்த கட்சிகள், எங்கே செல்லப் போகின்றன என்பது தெரிந்துவிடும். அதுவரையில் ஒரு சிறிய இடைவேளை.
செல்வப்பெருந்தகையின் கருத்துகளைப் பார்க்கும் போது கூட்டணி முறியப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக, நாங்கள் யாரிடமும் போய் கெஞ்சவில்லை. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு இரண்டு நாள்கள் முன்னதாக கூட்டணி குறித்து தலைமை அறிவிக்கும்.
மக்கள் விரோத அரசாக தி.மு.க., உள்ளது. தலைமைச் செயலகத்திலேயே வெடிகுண்டு வீசப் போவதாக மிரட்டல் வந்திருக்கிறது. தமிழகத்தில் வெடிகுண்டு, போதை கலாசாரம் அதிகரித்துவிட்டது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு மிக மோசமான மாநிலமாக தமிழகம் இருக்கிறது.
அடுத்து, மத்திய அரசின் நிதியில் இருந்து 1,42,000 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்துக்கு கிடைத்திருக்கும் நிதி என்பது 7000 கோடி ரூபாய் தான். உ.பி.,க்கு 25,000 கோடிக்கும் மேல் கொடுத்திருக்கிறார்கள். தமிழகத்தில் இருந்து பல லட்சம் கோடி ரூபாய், மத்திய அரசுக்கு செல்கிறது.
இந்தளவுக்கு ஒரு பெரிய துரோகத்தை மத்திய அரசு செய்யக் கூடாது. வரி பகிர்வில் தமிழகத்துக்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது. ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்பதைப் போல வடக்கு, தெற்கு என வரி பகிர்வை செயல்படுத்துகிறார்கள்.
இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.
வாசகர் கருத்து