உதயசூரியன் சின்னத்தில் போட்டியா : அறிவாலயத்தில் கொதித்த ம.தி.மு.க.,

தி.மு.க., ம.தி.மு.க., இடையே நடந்த மூன்றாம்கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. 'உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம்' என ம.தி.மு.க., நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தி.மு.க கூட்டணியில் கொ.ம.தே.க, ஐ.யூ.எம்.எல்., இ.கம்யூ., மா.கம்யூ., ஆகிய கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு நிறைவடைந்துவிட்டது. ம.தி.முக., மற்றும் வி.சி., ஆகிய கட்சிகளுக்கான தொகுதிகள் இறுதி செய்யப்படவில்லை. வி.சி., தலைவர் திருமாவளவன் வெளியூர் பயணத்தில் இருப்பதால் ம.தி.மு.க., நிர்வாகிகளுடன் தி.மு.க., நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அறிவாலயத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ம.தி.மு.க., அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுன் ராஜ், " தி.மு.க., நிர்வாகிகளிடம் நடந்த பேச்சுவார்த்தையில் 2 லோக்சபா சீட், ஒரு ராஜ்யசபா சீட் கேட்டிருந்தோம். அதுவும் எங்கள் கட்சியின் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் எனக் கூறினோம். அதற்கு, தலைமையிடம் கலந்து ஆலோசித்துவிட்டு சொல்வதாக தி.மு.க., தரப்பில் கூறியுள்ளனர்.
அறிவாலயத்துக்கு வருவதற்கு முன்னதாக பொதுச் செயலர் வைகோவிடம் ஆலோசனை நடத்தினோம். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற நிர்பந்தத்தை ஒருபோதும் ஏற்க மாட்டோம். அடுத்தகட்ட பேச்சுவார்த்தை எப்போது எனத் தெரியவில்லை. அவர்கள், நேரம் ஒதுக்கவில்லை" என்றார்.
ம.தி.மு.க., நிர்வாகிகளின் பேட்டி குறித்து தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறுகையில், "2019 லோக்சபா தேர்தலைப் போலவே, சிறிய கட்சிகளின் வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும் என தி.மு.க., தலைமை விரும்புகிறது. கடந்த முறை சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்ட திருமாவளவன், சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றார்.
'இதனைத் தவிர்க்க வேண்டுமானால், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதே சிறந்தது' என ஸ்டாலின் நினைக்கிறார். கடந்த முறை ஈரோட்டில் ம.தி.மு.க., சார்பில் களமிறங்கிய கணேசமூர்த்தி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் அதிக வாக்குகளைப் பெற்றார்.
ஆனால், தி.மு.க., சின்னத்தில் போட்டியிடும்போது, அவர்கள் தி.மு.க., எம்.பி.க்களாகவே பார்க்கப்படுன்றனர். இந்த சங்கடத்தை தவிர்க்கவே, தனிச்சின்னத்தில் நிற்க வேண்டும் என சிறிய கட்சிகள் நினைக்கின்றன. வி.சி.,யும் இந்தமுறை பானை சின்னத்திலேயே களமிறங்குகிறது. ம.தி.மு.க.,வின் தனிச் சின்ன வேண்டுகோளை தி.மு.க., ஏற்குமா என்பது ஓரிரு நாள்களில் தெரிந்துவிடும்" என்றார்.
வாசகர் கருத்து