அதிக இடங்கள் கேட்டோம்; கிடைக்கவில்லை : கம்யூ., தலைவர்கள் ஆதங்கம்

லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் இரண்டு கம்யூ., கட்சிகளுக்கும் தலா இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
லோக்சபா தேர்தலில் தொகுதிப் பங்கீட்டை முடிவுக்குக் கொண்டு வரும் பணியில் அக்கட்சி தலைமை ஈடுபட்டுள்ளது. கடந்த வாரம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா ஓர் இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதே வரிசையில், ம.தி.மு.க.,வுக்கும் ஓர் இடத்தை ஒதுக்குவதற்கு தி.மு.க., தலைமை முன்வந்தது.
தி.மு.க.,வின் இந்த முடிவுக்கு ம.தி.மு.க., நிர்வாகிகள் உடன்படவில்லை. இதனால் மூன்று கட்டங்களைக் கடந்தும் பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை. இன்று ம.தி.மு.க., இ.கம்யூ., மா.கம்யூ., ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடக்க உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், தி.மு.க தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு கையெழுத்தாகியுள்ளது.
இதன்படி, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் கடந்த 2019 லோக்சபா தேர்தலைப் போலவே தலா இரண்டு இடங்களில் போட்டியிடுகின்றன. இதுகுறித்து இ.கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், 'தி.மு.க.,வுடன் நடத்தப்பட்ட மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. எத்தனை இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பதைக் காட்டிலும் நாடு முக்கியம் என்று கருதுகிறோம். அதனால் தான் இரண்டு தொகுதிகளுக்கு ஒப்புக் கொண்டோம். இதில், எந்தெந்த தொகுதிகள் என்பதைப் பேசி முடிவு செய்வோம். எங்களுக்கு இடையே எந்த சிக்கலும் இல்லை' என்றார்.
அடுத்துப் பேசிய மா.கம்யூ., மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், "கூடுதல் இடங்களில் போட்டியிடுவது குறித்து கேட்டோம். ஆனால், ஏற்கெனவே உள்ள கட்சிகளோடு கூடுதல் கட்சிகளும் வரவுள்ளதால் இடங்களை அதிகப்படுத்தும் சூழ்நிலை இல்லை என தி.மு.க., தெரிவித்தது. அதையேற்று, தி.மு.க தலைவரும் நானும் உடன்பாட்டில் கையெழுத்திட்டோம். எந்த தொகுதிகள் என்பது பிறகு பேசி முடிவு எடுக்கப்படும்" என்றார்.
வாசகர் கருத்து