யாருக்காக, 'நீட்' தேர்வு ரத்து?

'மருத்துவ கல்லுாரிகளுக்கான நுழைவு தேர்வான, 'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும்' என, தமிழகத்தில், சில கட்சிகள் போராட்டங்கள் நடத்தியதை கண்டோம். அதே, நீட் எதிர்ப்பு, தற்போது, தேர்தல் பிரசார உத்தியாகவும் மாறியுள்ளது.

இந்த கட்சிகள் சொல்வதை போல, 'நீட்' தேர்வால், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளதா?முன்பெல்லாம், மருத்துவ படிப்பில் சேர்க்கை என்றாலே, கண்டிப்பாக, 'கேபிடேஷன் பீஸ்' இருக்கும். இதை, அரசு மருத்துவ கல்லுாரிகளில் உயர்ந்த மதிப்பெண் அடிப்படையில் இடம் பிடிக்கும், மாணவர்களை தவிர, வேறு யாராலும் தவிர்க்க முடியாது என்ற, நிலை இருந்தது. ஏனெனில், அரசு மருத்துவ கல்லுாரிகளில் வெறும், 2,150 இடங்கள் தான் இருந்தன, மற்ற இடங்கள் தனியார் கல்லுாரிகளில் தான் இருந்தன.
கடந்த, 2000 முதல், 2015ம் ஆண்டு வரை, மருத்துவ படிப்பில் சேருவதற்கான போட்டியினால், தனியார் கல்லுாரிகளில், சேர்க்கை ஏதும் குறையவில்லை. அதனால், தனியார் கல்லுாரிகளின், 'கேபிடேஷன் பீஸ்' வருமானமும் குறையவில்லை. 'கேபிடேஷன் பீஸ்' என்பது, ஒரு மாணவருக்கு, 50 லட்சம் கூட வசூலிக்கப்பட்டதாக தகவல் உண்டு.

அதாவது, பணக்கார மாணவர்கள் மட்டுமே, தைரியமாக மருத்துவ படிப்பு கனவு காண முடியும் என்ற, நிலை இருந்தது. இதில், குறிப்பிடத்தக்க அளவில், மருத்துவர்களின் வாரிசுகளும் அடக்கம். கடந்த, 2000ம் ஆண்டுக்கு பின், தமிழக அரசு புதிய அரசு மருத்துவ கல்லுாரிகளை அதிகளவில் நிறுவ தொடங்கியது. தற்போது, படிப்படியாக அதிகரித்து, அரசு கல்லுாரிகளில், 3,550 இடங்கள் உள்ளன. மேலும், இப்போது கட்டப்பட்டு வரும், புதிய மருத்துவ கல்லுாரிகளால், அடுத்த ஆண்டிற்குள், இடங்கள், 5 ஆயிரமாக உயரும் என, தெரிகிறது.

இதனால், வசதி படைத்த மாணவர்களுக்கு மட்டுமின்றி, மற்ற மாணவர்களுக்கும் வாயப்பு அதிகரிக்க தொடங்கிஉள்ளது. ஆனால், இதையும் விட, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவு மாணவர்களுக்கு, கைகொடுத்தது நீட் தேர்வு தான். நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தான் சேர்க்கை இருக்க வேண்டும் என்றான பின், பொருளாதார அந்தஸ்து ஒரு தடையல்ல என்ற சூழல், உருவாகி உள்ளது. மருத்துவர்களின் வாரிசுகள் தான், மருத்துவ படிப்பு படிக்க முடியும் என்ற அறிவிக்கப்படாத, குலக்கல்வி நிலை மாறி, தற்போது, அனைத்து தரப்பு மாணவர்களுக்கும், சம வாய்ப்பு கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, 7.5 சதவீத இட ஒதுக்கீடு என்ற ஏற்பாடு, ஏழை மாணவர்களின் வாய்ப்பை மேலும் பிரகாசமாக்கி உள்ளது. நீட் தேர்வு அமலுக்கு வந்தபோது, தமிழக பாடத் திட்டத்தில் பயின்ற மாணவர்களால், தேர்வை சமாளிக்க முடியவில்லை என்பது உண்மை தான். அதற்கு முழு பொறுப்பையும் ஏற்க வேண்டியது தமிழக அரசே. அந்த நேரத்தில், தமிழக பாடத் திட்டம், 15 ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் இருந்தது.

பாடத் திட்டம் புதுப்பிக்கப்பட்ட பின், கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில், தமிழக மாணவர்கள், 57.44 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். அதேநேரத்தில், தேசிய அளவிலும், 56.44 சதவீதம் மாணவர்கள் தான் தேர்ச்சி பெற்றனர். நீட் தேர்வால் ஏழை மாணவர்களுக்கு இவ்வளவு நன்மை இருக்கும் போது, யாருக்காக ரத்து செய்ய கோருகிறார்கள்? அரசியல் தொடர்புள்ள நபர்கள் தான், அதிகளவில் தனியார் மருத்துவ கல்லுாரிகளை நடத்தி வருகின்றனர் என்பது, அனைவரும் அறிந்த விஷயம்.

நீட் தேர்வுக்கு பின், தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்த வேண்டும் என்ற, கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், 'கேபிடேஷன் பீஸ்' வசூல் கணிசமாக குறைந்து விட்டது. அது, ஆண்டுக்கு, 1,000 கோடி ரூபாய்க்கு குறையாமல் இருந்திருக்கலாம் என, கூறப்படுகிறது. ஆக, நீட் ஒழிப்பு கோருபவர்கள், தன்னலத்திற்காக தான் குரல் எழுப்புகிறார்களே ஒழிய, ஏழை மாணவர்களின் நலனுக்காக அல்ல!
- ஆர்.கண்ணன்,
பேராசிரியர், மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)