'பா.ஜ.,வில் சேர உள்ளதாக வதந்தி பரவுகிறது' : எஸ்.பி.வேலுமணி கொதிப்பு
'பா.ஜ.,வில் சேர உள்ளதாக சிலர் பொய் தகவல் பரப்புகின்றனர்' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.
பல்லடத்தில் என் மண்; என் மக்கள் பாத யாத்திரையின் நிறைவு விழாவில் முக்கிய பிரமுகர்கள் சிலர், பா.ஜ.,வில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், அப்படி எந்தவொரு நிகழ்வும் நடைபெறவில்லை. முன்னதாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் சிலர் பா.ஜ.,வில் இணையலாம் எனக் கூறப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்து அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியுள்ளார்.
கோவையில் முன்னாள் எம்.எல்.ஏ., சிங்கை கோவிந்தராஜனின் 25வது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் எஸ்.பி.வேலுமணி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவுகின்றன. அதற்காக தி.மு.க., மற்றும் பா.ஜ.,வின் தொழில்நுட்ப பிரிவு அணியினரைப் பாராட்ட வேண்டும். அவர்கள், இல்லாத ஒன்றை இருப்பதைப் போலவும் இருப்பதை இல்லாதது போலவும் காட்டுகின்றனர். தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் எப்போதும் ஒன்று சேராது. அதேபோல, காங்கிரசும் பா.ஜ.,வும் எப்போதும் ஒன்று சேராது.
என்னைப் பற்றியும் முன்னாள் அமைச்சர் தங்கமணியைப் பற்றியும் பொய் தகவல் பரப்புகின்றனர். அ.தி.மு.க., எங்களின் தாய் வீடு. கடந்த 30 ஆண்டுகளாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளில் ரத்ததானம் செய்து வருகிறேன். அனைவரும் தாய்வீட்டுக்கு தான் வருவார்கள். தற்போது 2 கோடி உறுப்பினர்களோடு உலகின் 7வது பெரிய கட்சியாக அ.தி.மு.க., உள்ளது.
சாதாரண நிலையில் இருந்தவர்களை எல்லாம் எம்.எல்.ஏ., எம்.பி., என அழகு பார்த்தவர், ஜெயலலிதா. அப்படியிருக்கும்போது, வெறும் 3, 4 சதவீத வாக்காளர்கள் உள்ள பா.ஜ.,வில் நாங்கள் ஏன் சேரப் போகிறோம்? இதுபோன்ற வதந்திகளுக்கு ஏன் பதில் சொல்ல வேண்டும்?
இவ்வாறு எஸ்.பி.வேலுமணி பேசினார்.
வாசகர் கருத்து