மீண்டும் சிதம்பரம் தொகுதி! - உறுதி செய்த திருமாவளவன்

தி.மு.க., கூட்டணியில் மீண்டும் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக, வி.சி., தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்யும் வேலையில், தி.மு.க., நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். கொ.ம.தே.க., ஐ.யூ.எம்.எல்., ஆகிய இரு கட்சிகளுக்கு மட்டுமே தி.மு.க.,வில் தலா ஓர் இடம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மா.கம்யூ., நிர்வாகிகளுடன் தி.மு.க., நிர்வாகிகள் நடத்திய தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதி வடிவம் பெறவில்லை. அதேபோல், இ.கம்யூ., ம.தி.மு.க., வி.சி., ஆகிய கட்சிகளுக்கான தொகுதிகளும் இறுதி செய்யப்படவில்லை. ஆனால், சிதம்பரம் தொகுதியில் தான் போட்டியிட உள்ளதாக உறுதி செய்துள்ளார், வி.சி., தலைவர் திருமாவளவன்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ' தி.மு.க கூட்டணியில் 4 தொகுதிகளைக் கேட்டிருக்கிறோம். அதில், ஒரு பொதுத்தொகுதி மற்றும் மூன்று தனித்தொகுதிகள் அடங்கும். அதேநேரம், எட்டு முதல் 10 கட்சிகள் உள்ள கூட்டணியில் நாங்கள் கேட்கும் தொகுதிகளைப் பெற முடியாது என்பதையும் அறிவோம். அந்தவகையில் சூழலுக்கு ஏற்ப முடிவு செய்வோம்.
தமிழகத்தில் எதிர்க்கட்சி கூட்டணிகளே இல்லை என்னும் நிலை தான் உள்ளது. பா.ஜ., கூட்டணிக்கு ஆள்களைத் தேடுகிறது. அ.தி.மு.க., இன்னும் கூட்டணியை உருவாக்கவில்லை' என்றார்.
வாசகர் கருத்து