'2 சீட்டு தான்.. இல்லாவிட்டால் தனித்துப் போட்டி' - காங்கிரஸை சீண்டும் திரிணாமுல் காங்கிரஸ்
லோக்சபா தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரைன் கூறியுள்ள தகவல், காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தலில் 'இண்டியா' கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் வேலைகளில் காங்கிரஸ் தலைமை ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுவிட்டதாக தகவல் வெளியானது.
ஆனால், 'மேற்குவங்கத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும்' என அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் லோக்சபா எம்.பி.,யுமான டெரிக் ஓ பிரைன் கூறியிருந்தார். இந்த தகவலை காங்கிரஸ் தலைமை எதிர்பார்க்கவில்லை.
டெரிக் ஓ பிரைன் பேச்சு குறித்து திரிணாமுல் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியவதாவது:
காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்தபோது, மேற்குவங்கத்தில் 2 தொகுதிகளை ஒதுக்குவதாக மம்தா கூறினார். காரணம், 2019 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் 2 இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் ஓர் இடத்தில் கூட அக்கட்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை.
அந்தவகையில், இந்தமுறை 2 இடங்களுக்கு மேல் ஒதுக்குவது கடினம் என மம்தா கூறிவிட்டார். 'இந்தமுறை, குறைந்தது 5 தொகுதிகளாவது வேண்டும்' என காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. காங்கிரசுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், தனித்துப் போட்டியிட உள்ளதாகவும் மம்தா அறிவித்தார். அதையே டெரிக் ஓ பிரைனும் அறிவித்தார்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
டெரிக் ஓ பிரைனின் கருத்து குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "திரிணாமுல் காங்கிரசுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இண்டியா கூட்டணியை வலுப்படுத்துவதும் பா.ஜ.,வை வீழ்த்துவதையும் தனது இலக்கு என மம்தா கூறியிருக்கிறார். அவரை நாங்கள் மதிக்கிறோம். உ.பி.,யில் கூட்டணி உடன்பாடு எட்டப்பட்டுவிட்டது. ஆம் ஆத்மியுடனும் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துவிட்டது. அந்தவகையில், மேற்குவங்கத்தில் கூட்டணி இறுதி செய்யப்படுவதற்கு காலம் ஆகும்" என்றார்.
வாசகர் கருத்து