காங்கிரஸ் - ஆம் ஆத்மி தொகுதி உடன்பாடு - உ.பி.,யில் என்ன நிலவரம்?
டில்லி, ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கட்சி இணைந்து போட்டியிடுவதற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும்' என ஆம் ஆத்மி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு எதிராக முக்கிய எதிர்க்கட்சிகள் திரண்டு 'இண்டியா' என்ற கூட்டணியை உருவாக்கின. ஆனால், கூட்டணிக்குள்ளேயே ஏராளமான முரண்பாடுகள் ஏற்பட்டன. பீஹாரின் ஐக்கிய ஜனதா தளம், உத்தரபிரதேசத்தில் உள்ள ராஷ்ட்ரீய லோக்தளம் ஆகிய கட்சிகள், 'இண்டியா' கூட்டணியை விட்டு விலகின.
அடுத்து, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், காஷ்மீரில் தேசிய மாநாடு மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்துப் போட்டியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இது, காங்கிரஸ் தலைமைக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இந்தநிலையில், உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி - காங்கிரஸ் கட்சி இடையே தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
அங்கு சமாஜ்வாதி 63 இடங்களிலும் காங்கிரஸ் 17 இடங்களிலும் போட்டியிடுவது என முடிவாகியுள்ளது. உ.பி.,யை பொறுத்தவரையில் இண்டியா அணியில் சமாஜ்வாதி கட்சி பிரதான கட்சியாக உள்ளது. அங்கு தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட சிக்கல்களை சரிசெய்ததில் பிரியங்கா காத்தி முக்கிய பங்கு வகித்ததாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சியுடனும் தொகுதிப் பங்கீட்டை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது, காங்கிரஸ். அதன்படி, டெல்லியில் உள்ள ஏழு இடங்களில் நான்கு இடங்களில் ஆம் ஆத்மி கட்சியும் மூன்று இடங்களில் காங்கிரசும் போட்டியிடுவது என முடிவாகியுள்ளது.
ஹரியானா மாநிலத்திலும் 10 தொகுதிகளில் 9ல் காங்கிரசும் மீதமுள்ள ஓர் இடத்தில் ஆம் ஆத்மி போட்டியிடுவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளில் 2 இடங்களில் ஆம் ஆத்மி போட்டியிட உள்ளது. காங்கிரஸ், 25 இடங்களில் போட்டியிட உள்ளது. இவற்றில் ஆம் ஆத்மிக்கான தொகுதிகள் எவை என்பது இன்னமும் முடிவு செய்யப்படவில்லை.
பின்னணி என்ன?
தேர்தல் தேதி அறிவிப்பதற்குள் தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்வதில் காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. இதனை இன்னும் தாமதம் செய்தால், கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும் வெளியேறிவிடும் என்ற அச்சம், காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சமாஜ்வாதி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை முடிவுக்கு கொண்டு வரும் வேலையில் காங்கிரஸ் இறங்கியது. இந்த உடன்பாடு, காங்கிரஸ் கட்சிக்கு ஆறுதலை கொடுத்துள்ளதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
வாசகர் கருத்து