'பீஹாருக்கு தொலைநோக்கு கொண்ட தலைவர் தேவை!' - நிதீஷை சாடிய தேஜஸ்வி
ராகுல் காந்தி பாணியில் ஜன் விஸ்வாஸ் என்ற பெயரில் 11 நாள் யாத்திரையை தொடங்கியிருக்கிறார், பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ். லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மக்களிடம் ஆதரவை திரட்டுவதற்காக இப்படியொரு யாத்திரை அவர் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
பீஹார் மாநிலத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகியவற்றின் ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடத்தி வந்தது. இந்த சூழலில், இண்டியா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகி, பா.ஜ., ஆதரவுடன் மீண்டும் முதல்வராக பதவியேற்றார். இது இண்டியா கூட்டணியிலும் பீஹார் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது. நிதிஷ் குமாரின் கட்சித் தாவலை, சட்டமன்றத்தில் வைத்து கடுமையாக விமர்சித்தார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்.
இந்தநிலையில், யாத்திரை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், "பீஹார் மாநிலத்தின் வளர்ச்சி குறித்து நிதிஷ் குமாருக்கு எந்தவித இலக்கும் இல்லை. தற்போது பீஹாருக்கு தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு தலைவர் தேவைப்படுகிறார். அதற்கான தகுதி நிதிஷ் குமாரிடம் இல்லை. புதிய கோணத்தில் சிந்திக்காமல், ஒரு கூட்டணியில் இருந்து இன்னொரு கூட்டணிக்கு தாவிக் கொண்டிருக்கிறார்.
பீஹாரின் மிகப் பெரிய கட்சியாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளது. மக்கள் வைத்திருந்த நம்பிக்கைக்கு அடையாளமாக நிதிஷ் குமாருடன் இணைந்து 17 மாதங்கள் ஆட்சியை நடத்தினோம்.
இந்தக் காலகட்டத்தில் அரசு எடுத்த முடிவுகளின் பின்னால் எங்கள் கட்சி உள்ளது. பீஹார் இளைஞர்களுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்பது எங்களின் உறுதிமொழியாக உள்ளது. பிரதமர் மோடியின் ரோஜ்கர் மேளாவுக்கு நாங்கள் முன்வைத்த திட்டமே முன்மாதிரியாக இருக்கிறது" என்றார்.
வாசகர் கருத்து