Advertisement

கம்யூ.,க்களுக்கு 2 தொகுதிகள் அதிகம் -தி.மு.க., கூட்டணிக்குள் புகைச்சல்

லோக்சபா தேர்தல் களம் சுறுசுறுப்படைந்துள்ள நிலையில் பா.ஜ., தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியிலும், காங்., தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலும் தொகுதிகள் ஒதுக்கீடு, சாதக தொகுதிகளை எவ்வாறு கைப்பற்றுவது, மக்கள் ஆதரவு கட்சிகளை கூட்டணிக்குள் இழுப்பது உள்ளிட்ட அரசியல் காட்சிகள் அனைத்து மாநிலங்களிலும் சூடுபிடித்துள்ளன.

தமிழகத்தில் தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்குவது, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது போன்ற கூட்டணி பேச்சு தீவிரமடைந்துள்ளது.

2019 லோக்சபா தேர்தலில் தேசிய அளவில் ஐ.மு., கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூ., 69 தொகுதிகளில் போட்டியிட்டு 3 தொகுதிகளிலும், இந்திய கம்யூ., 49 தொகுதிகளில் போட்டியிட்டு 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. மொத்தம் 5 வெற்றி தொகுதிகளில் தலா 2 தொகுதிகள் தமிழகத்தில் இருந்து கிடைத்தன. இதற்கு பிரதான காரணம் தி.மு.க., இக்கட்சியுடன் கூட்டணி வைத்ததால் தான் தேசிய அளவில் 5க்கு 4 தொகுதிகளை கைப்பற்ற முடிந்தது.

'கம்யூனிஸ்ட் கோட்டை'யான கேரளாவில் 16 தொகுதிகளில் களம் இறங்கி மார்க்சிஸ்ட் கம்யூ., ஒரு தொகுதியை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. இங்கு 4 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய கம்யூ.,வை அனைத்திலும் மக்கள் கை கழுவினர். இவை உட்பட மேற்குவங்கம், ஒடிஸா, பீகார், தெலுங்கானா என அனைத்து மாநிலங்களிலும் ஒரு தொகுதியை கூட வெல்ல முடியவில்லை. அந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூ., 1.75 சதவீதம், இந்திய கம்யூ., 0.58 சதவீதம் என்ற அளவில் தான் ஓட்டுக்களையும் பெற முடிந்தது.

இந்த தேர்தலிலும் 4 (இ.கம்யூ., -2, மார்க்., கம்யூ., -2) தொகுதிகள் ஒதுக்குவது அதிகம் என கூட்டணிக்குள் புகைச்சல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூறுகையில், " 2019ல் வென்ற தொகுதிகளை மீண்டும் ஒதுக்க வேண்டும் என்பதுடன் கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும்' என தி.மு.க.,விற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் நெருக்கடி கொடுக்கின்றன. அந்த தேர்தலில் 2 தொகுதிகள் ஒதுக்கியதே அதிகம்.

தமிழகத்திலும் அக்கட்சிகளுக்கு ஓட்டுக்கள் குறைந்து கொண்டே வருகின்றன. கூட்டணி என்ற 'குதிரை சவாரி'யில் மூலமே கட்சியை தக்கவைத்து வருகின்றன. எனவே இந்த தேர்தலில் கூடுதல் தொகுதிகளை ஒதுக்கினால் இழப்பு தி.மு.க.,விற்கும், மத்தியில் ஐ.மு., கூட்டணிக்கும் தான்" என்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்