சமூக வலைதளத்தில் வெளியான தபால் ஓட்டு
நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டளித்த நபரின் தபால் ஓட்டை, சமூக வலைதளத்தில், அக்கட்சி மாவட்ட செயலர் வெளியிட்டது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், தேர்தல் பணியில் ஈடுபடுவோர், தபால் ஓட்டளித்து வருகின்றனர். இந்நிலையில், நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலர் தம்பி ஆனந்தன் என்பவர், ''தனது 'எக்ஸ்' வலைதளப் பதிவில், 'மைக்' சின்னத்திற்கு நான்தான் முதல் ஓட்டு போட்டேன் என்ற கொண்டாட்டத்தில் எனது நண்பன் 'எனக்கூறி, மத்திய சென்னை தொகுதிக்கான தபால் ஓட்டில், மைக் சின்னத்தில் 'டிக்' அடித்த தபால் ஓட்டை பகிர்ந்துள்ளார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தபால் ஓட்டளித்தவர், யாருக்கு ஓட்டளித்தேன் என்பதை பொதுவெளியில் பகிரலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறுகையில், 'ஓட்டளிப்பதில் ரகசியம் காக்கப்பட வேண்டும். ஆனால், இவ்விஷயத்தில் ஓட்டளித்த நபரே வெளியிட்டாரா அல்லது வேறு யாரேனும் புகைப்படம் எடுத்து வெளியிட்டனரா என்பது தெரியவில்லை. இதுகுறித்து விசாரிக்கப்படும்' என்றார்.
வாசகர் கருத்து