வெறும் கையில் முழம் போடும் அ.தி.மு.க., வேட்பாளர்!
பெரம்பலுார் லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., சார்பில், முன்னாள் வனத்துறை அமைச்சர் செல்வராஜின் தம்பி மகன் சந்திரமோகன் வேட்பாளராக போட்டியிடுகிறார். சீட் கேட்கவே கட்சி தலைமைக்கு, 15 கோடி ரூபாயை கடன் வாங்கி தவணையில் செலுத்தினார்.
இதனால், வேட்பாளர் பெயர் பட்டியல் வெளியிடுவதற்கு முதல் நாள் இவரை மாற்றி, முன்னாள் அமைச்சர் சிவபதிக்கு சீட் தர கட்சி தலைமை முடிவெடுத்தது. தனக்கு சீட் வேண்டாம் என சிவபதி மறுத்ததும் வேறு வழியில்லாமல் சந்திரமோகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, வாகனம், டீசல் செலவு, பிரசாரத்துக்கு வரும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு உணவு செலவு, கூட்டத்தில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு கூலி என அனைத்து தேர்தல் செலவுகளுக்கும் பணம் இல்லாமல் அன்றாடம் யாரிடமாவது கடன் வாங்கி, இந்த செலவுகளை அவர் செய்து வருவதாக கட்சி நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர்.
கையில் காசு இல்லாததால் விரக்தியடைந்த சந்திரமோகன், கள்ளப்பட்டி கிராமத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபின், மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்தவர் மயக்கம் ஏற்பட்டு ஒருநாள் ஓய்வெடுத்துள்ளார். பின், ஓரிடத்தில் கடனாக குறிப்பிட்ட தொகையை பெற்று மீண்டும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என, கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
வாசகர் கருத்து