'தேர்வுக்கு படிக்க விடுங்க பிரசாரத்திற்கு கூப்பிடாதீங்க!'
'கல்லுாரிகளில், 'செமஸ்டர்' தேர்வுகள் துவங்குவதால், எங்கள் குழந்தைகளை படிக்க விடுங்கள்; தேர்தல் பிரசாரத்திற்கு அழைக்காதீர்' என, அரசியல் கட்சிகளுக்கு, பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் தங்களுடன் அழைத்து செல்லும், 100க்கும் மேற்பட்டோரில், கல்லுாரிமாணவர்களும் அடங்குவர்.
பல கல்லுாரிகளில் செமஸ்டர் தேர்வுகள், இன்னும் சில தினங்களில் துவங்குகின்றன. எனவே, மாணவர்களை தேர்வுக்கு படிக்க அறிவுரை கூறுமாறும், பிரசாரத்திற்கு அழைத்து செல்வதை தவிர்க்குமாறும் கட்சிகளுக்கு, பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, பெற்றோர்கள், பேராசிரியர்கள் தரப்பில் கூறியதாவது:
தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளில் மாணவர் அணி, இளைஞர் அணி, தகவல் தொழில்நுட்ப அணிகளின் பொறுப்புகளில், கல்லுாரி மாணவர்கள் தான் அதிகம் உள்ளனர். கட்சியினரை விட, இளைஞர்களான கல்லுாரி மாணவர்கள் சுறுசுறுப்பாகவும், ஆர்வமாகவும் பணிபுரிவர்.
இதனால், 'பிட் நோட்டீஸ்' வழங்குவது, தனியே வாகனத்தில் சென்று வேட்பாளரை பற்றி மக்களிடம் பேசுவது போன்ற பணிகளில், கல்லுாரி மாணவர்களை தான் ஈடுபடுத்துகின்றனர்.
குறிப்பாக, சமூக ஊடக பிரசாரத்திற்கு மாணவர்கள் தான் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதற்காக, அவர்களுக்கு ஊதியமும் வழங்குகின்றனர்.
அடுத்த சில தினங்களில் கல்லுாரிகளில் செமஸ்டர் தேர்வுகள் துவங்குகின்றன. அதற்காக படிக்காமல், பல மாணவர்கள், தங்களுக்கு வேண்டிய கட்சிகளின் வேட்பாளருக்கு பிரசாரம் செய்கின்றனர்.
வெளியூரில் இருந்து சென்னைக்கு படிக்க வந்துள்ள மாணவர்கள், பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபடுகின்றனர். தற்போது பிரசாரத்திற்காக, 'கவனிக்கப்படுவது' மாணவர்களுக்கு, தற்காலிக மகிழ்ச்சியை தரலாம்.
ஆனால், படித்து பட்டம் பெற்று, ஒரு நல்ல வேலைக்கு சென்றால் தான், அவர்களை நம்பி உள்ள பெற்றோரும், குடும்பத்தினரும் பயன் பெறுவர். எனவே, அனைத்து அரசியல் கட்சிகளும், கல்லுாரி மாணவர்களை தேர்தல் பிரசாரத்திற்கு அழைத்து செல்லாமல், தேர்வுக்கு படிக்கஅறிவுரை வழங்க வேண்டும்.
இதை ஒரு பொது அறிவிப்பாக, அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அறிக்கையாக வெளியிட வேண்டும். அப்போதுதான் மாணவர்களும் படிப்பின் அக்கறையை உணர்ந்து, தேர்வுக்கு படிப்பர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து