திருச்சியில் ஜே.பி.நட்டா பேரணிக்கு அனுமதி மறுப்பு: என்ன காரணம்?
திருச்சியில் பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் வாகனப் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு, போக்குவரத்து நெரிசலை ஒரு காரணமாக போலீஸ் முன்வைத்துள்ளது.
லோக்சபா தேர்தல் தேதி நெருங்கிக் கொண்டிருப்பதால் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை நோக்கி தேசிய தலைவர்களும் வருகை தருவதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று திருச்சிக்கு வருகை தர இருந்தார்.
அவர், சிதம்பரத்தில் கார்த்தியாயினியையும் விருதுநகரில் நடிகை ராதிகாவையும் புதுச்சேரியில் நமச்சிவாயத்தையும் ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது.
இதற்கான ஏற்பாடுகளை தமிழக பா.ஜ., நிர்வாகிகள் செய்து வந்தனர். இந்தப் பயணத்தின் போது திருச்சி காந்தி மார்க்கெட் முதல் மலைக்கோட்டை வரையில் ரோடு நடத்துவதற்கும் பா.ஜ., அனுமதி கோரியிருந்தது.
ஆனால், ஜே.பி.நட்டாவின் வாகனப் பேரணிக்கு அனுமதி அளிக்க முடியாது என திருச்சி மாவட்ட காவல்துறை மறுத்துள்ளது. அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி மறுக்கப்படுவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா நடக்க உள்ளதால் இந்த நேரத்தில் அனுமதி கொடுப்பதற்கு வாய்ப்பில்லை. அதேநேரம், மாற்றுப் பாதைகளில் வாகனப் பேரணிக்கு அனுமதி கேட்டால் பரிசீலனை செய்வோம்" என காவல்துறை தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து