கேரளாவில் முஸ்லிம் லீக் கொடிக்கு காங்., தடை
காங்கிரஸ் எம்.பி., - ராகுல், வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பின்பு 'ரோடு ஷோ' நடத்தினார். அதில் அங்கொன்றும் இங்கொன்றுமாக காங்கிரஸ் கொடிகள் தென்பட்டன. ஆனால் கேரளாவில் காங்கிரசின் முக்கிய கூட்டணி கட்சியான முஸ்லிம் லீக்கின் பச்சை வண்ணக்கொடி எங்கும் தென்படவில்லை. இந்த விவகாரம் கேரள அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
வயநாட்டில் பெரும் செல்வாக்குடன் உள்ள முஸ்லிம் லீக் கட்சியின் கொடியை, இந்த முறை ஊர்வலத்திற்கு எடுத்துவர வேண்டாம் என காங்கிரஸ் வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருந்தது. அதற்கு காரணமும் உண்டு. கடந்த 2019ல் ராகுல் வேட்புமனு தாக்கல் செய்தபோது, காங்கிரஸ் கொடியை விட முஸ்லிம் லீக்கின் பச்சைக்கொடி தான் அதிகமாக காணப்பட்டது. அப்போது 'ராகுல் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் கொடியேந்தி ஊர்வலம் நடத்தினர்' என வடமாநிலங்களில் சமூக ஊடகங்கள் வழி படங்கள், வீடியோக்கள் பரவின.
இதனால் வடமாநிலங்களில் ஹிந்து ஓட்டுக்கள் கிடைக்காமல் போயிற்று என்று காங்., கருதியது. அதனால் தான் இம்முறை முன்கூட்டியே முஸ்லிம் லீக்கிற்கு கட்டுப்பாடு விதித்து விட்டது. அந்த கட்சியினரும் கொடிகள் இல்லாமல் பங்கேற்றனர்.
இது குறித்து மா. கம்யூ., மூத்த தலைவரும், கேரள முதல்வருமான பினராயி விஜயன் கூறுகையில், ''முஸ்லிம் லீக்கிற்கு அவர்கள் கொடியை பயன்படுத்தும் சுதந்திரத்தை கூட காங்கிரஸ் தர மறுக்கிறது. அந்த அளவிற்கு பா.ஜ.,வை கண்டு காங்கிரஸ் பயப்படுகிறது. இந்த நிலையில் எப்படி தேர்தலில் பா.ஜ.,வை எதிர்கொள்வீர்கள். காங்கிரஸ் பீதியில் உள்ளது,'' என்றார்.
முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான குஞ்ஞாலிகுட்டி கூறுகையில், ''எங்கள் கொடி பறக்காதது குறித்து மா.கம்யூ., வருந்த வேண்டாம். எங்கு பறக்க வைக்க வேண்டும் என்று நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். ஆனால் கம்யூனிஸ்ட்களின் கொடி கேரளாவில் கூட மங்கி போய் விட்டதே. தமிழ்நாட்டில் உங்கள் கொடி, காங்கிரசுடன் இணைந்து தான் பறக்க வேண்டும். தனியாக என்றால் அங்கு உங்கள் கொடி விழுந்து கிடக்கிறதே,'' என்றார்.
பா.ஜ., தலைவரும், வயநாடு வேட்பாளருமான சுரேந்திரன் கூறுகையில், ''முஸ்லிம் லீக் நிலை பரிதாபமாக உள்ளது. எங்களுக்கு அனுதாபம் தான் தோன்றுகிறது,'' என்றார்.
வாசகர் கருத்து