அ.தி.மு.க., சூப்பர்; தி.மு.க., சுணக்கம் தமிழக உளவு துறை ரிப்போர்ட்
தேர்தல் களப்பணிகளில், அ.தி.மு.க., சிறப்பாகவும், தி.மு.க., சுணக்கமாகவும் இருப்பதாக, அரசுக்கு உளவு துறை அறிக்கை அனுப்பியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
அறிக்கை விபரம்:
அ.தி.மு.க.,வினர் ஒவ்வொரு தொகுதிக்கும் உட்பட்ட, வட்ட, கிளை, பூத் அளவில் தினமும் மக்களையும், கட்சியினரையும் சந்தித்து வருகின்றனர். அரசுக்கு எதிரான விபரங்கள் அடங்கிய, துண்டு பிரசுரங்கள் வழங்கி, ஆட்சியின் குறைகளை சுட்டிக்காட்டுகின்றனர். சட்டசபை தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்து, விரிவாக பிரசாரம் செய்கின்றனர்.
குறிப்பாக, முன்னாள் கட்சி நிர்வாகிகளின் வீடுகளுக்கு சென்றும், அவர்கள் வீடு மாறிச் சென்றிருந்தால், அவர்களை தொடர்பு கொண்டும் பிரசாரத்திற்கு அழைத்து வருகின்றனர். வீடுகளில் அமர்ந்து, திண்ணைப் பிரசாரம் செய்கின்றனர். மதிய உணவு இடைவேளையில், வாக்காளர்கள் சந்திப்பு கூட்டம் நடத்துகின்றனர்.
இதுதவிர திருப்பூர் அ.தி.மு.க.,வினர், உள்ளூர் வாக்காளர்கள் பணி நிமித்தமாக வெளியூரில் வசித்து வந்தால், அவர்களுடைய முகவரியை கண்டறிந்து அவர்கள் இருக்கும் இடங்களுக்கே செல்கின்றனர். அங்கு அவர்களைச் சந்தித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு, அவர்களை அ.தி.மு.க.,விற்கு ஆதரவாக ஓட்டளிக்க கேட்டுக்கொள்கின்றனர். இப்படி வேறு சில ஊர்களிலும் அ.தி.மு.க.,வினர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதவிர, கூட்டணி கட்சியான தே.மு.தி.க., ஐந்து தொகுதிகளில் போட்டியிட்டாலும், அக்கட்சி வேட்பாளர்களுக்கு, முன்னாள் அமைச்சர்கள் தீவிரமாக ஓட்டு சேகரிக்கின்றனர்.
கட்சியினர் தேர்தல் களத்தில் எப்படி செயல்படுகின்றனர் என்பதை அன்றைக்கு இரவே ஒரு ரிப்போர்ட்டாக கேட்டுப் பெறுகிறார் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி.
இந்தப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஒரு குழு தினந்தோறும் அவருக்கு ரிப்போர்ட் கொடுக்கிறது. அதன் அடிப்படையில் எங்கேனும் தவறு இருப்பதாக கண்டறியப்பட்டால், என்ன செய்ய வேண்டும் என்பதை ஒருங்கிணைப்பு குழுவினரிடம் தெரிவிக்கிறார்பழனிசாமி.
அதை உடனடியாக கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுக்குச் சொல்லி சரி செய்கின்றனர். இப்படி எங்கெல்லாம் சரி செய்கின்றனரோ, அந்தத் தகவல்களை மறுநாள் ஆக்ஷன் டேக்கன் ரிப்போர்ட்டாகக் கொடுக்கச் சொல்லி இருக்கிறார் பழனிசாமி.
இப்படி ஒவ்வொரு நாளும், பிரசார களத்தில் இருக்கும் பிரச்னைகள் முழுமையாக களையப்பட்டு, கட்சியினர் பிரசாரத்தில் வேகமாக முடுக்கி விடப்படுவதால், அ.தி.மு.க., பிரசாரம் தொய்வின்றி நடக்கிறது.
ஆனால், தி.மு.க.,வில் உள்ளாட்சி பிரதிநிதிகளாக உள்ள கவுன்சிலர்களும், கட்சி பொறுப்பில் உள்ள நிர்வாகிகளும் தனித்தனி கோஷ்டிகளாக செயல்படுகின்றனர்.
இரு தரப்பினரும், வேட்பாளர் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில், காலையில் சிறிது நேரமும், மாலையில் சிறிது நேரமும் என, பிரசாரம் செய்கின்றனர். இரு தரப்பும் ஒருங்கிணைந்து பிரசாரம் செய்வதில்லை. குறிப்பாக, கட்சியில் வட்ட, பகுதி, ஒன்றிய செயலர்களாக உள்ள நிர்வாகிகள், தங்களின் எதிர் தரப்பை கண்டுகொள்வதில்லை. மொத்தத்தில் கோஷ்டி பூசல் தலைவிரித்தாடுகிறது.
இதனால் களப்பணியில் அ.தி.மு.க., பிரசாரம் சூப்பராகவும், தி.மு.க.,வினரின் பிரசாரம் சுணக்கமாகவும் இருக்கிறது.
பா.ஜ., கூட்டணியில், பா.ஜ., நிர்வாகிகள், தொண்டர்கள் தான், அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு தீவிரமாக பிரசாரம் செய்கின்றனர்; அதற்கு இணையாக, அதன் கூட்டணி கட்சியினர்பணியாற்றுவதில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து