'அப்பவே ஒன்னும் செய்யல இப்ப மட்டும் என்ன செஞ்சுருவாரு?'
'கிருஷ்ணகிரி காங்., வேட்பாளர் கோபிநாத் மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக இருந்த போதே எதுவும் செய்யவில்லை; அவர் எம்.பி.,யாகி விட்டால், அவரை மக்கள் சந்திக்க கூட முடியாது' என, அ.தி.மு.க.,வினர் பிரசாரம் செய்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சட்டசபை தொகுதியில், காங்., கட்சியை சேர்ந்த கோபிநாத் தொடர்ந்து மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக இருந்தார். அந்த காலகட்டத்தில், ஓசூர் பகுதியின் வளர்ச்சிக்கான பணிகளை செய்யவில்லை. மக்களை சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்த கருத்தை முன்வைத்து, 2016 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., பிரசாரம் செய்து, கோபிநாத்தை தோற்கடித்து வெற்றி பெற்றது.
தற்போது கோபிநாத் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் நிலையில், அ.தி.மு.க., மீண்டும் அதே பிரசாரத்தை கையில் எடுத்துள்ளது. கோபிநாத் எம்.எல்.ஏ.,வாக இருந்த போதே மக்களை சந்திக்கவில்லை. எம்.பி.,யானால் அவரை பார்க்க முடியாது; வீட்டிற்கு சென்றாலும் சந்திக்க முடியாது என கூறி, அ.தி.மு.க.,வினர் தீவிர பிரசாரம் செய்கின்றனர். அதற்கு மக்கள் மத்தியிலும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
இது குறித்து, காங்., நிர்வாகிகளிடம் கேட்ட போது கூறியதாவது:
கோபிநாத் ஓசூர் தொகுதியில் அறியப்பட்டவர்; அவருக்கு மற்ற தொகுதிகளில் செல்வாக்கு இல்லை. அதனால் நாங்கள், தி.மு.க.,வின் தயவு இருந்தால் தான் வெற்றி பெற முடியும். 2006, 2011 சட்டசபை தேர்தலில், தி.மு.க., ஆதரவுடன் தான் கோபிநாத் எம்.எல்.ஏ.,வானார்; ஆனால், அப்போதைய ஓசூர் நகராட்சியில், தி.மு.க., கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளுக்கு எம்.எல்.ஏ., தொகுதி நிதியை பயன்படுத்தி வளர்ச்சி பணிகளை செய்ய கேட்டும், கோபிநாத் செய்து கொடுக்கவில்லை. இச்செயல் இன்னும், தி.மு.க.,வினர் மனதில் ஆறாத வடுவாக உள்ளது. 15 ஆண்டுகளாக எம்.எல்.ஏ., அலுவலகம் பக்கமே செல்லாத கோபிநாத், அலுவலகத்தை பூட்டியே வைத்திருந்தார். மக்களை சந்தித்து குறைகளை கேட்டதில்லை. இதை தான் அ.தி.மு.க.,வினர் தங்களது பிரசாரத்தில் முன்வைக்கின்றனர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
####பாக்ஸ்'####
தெலுங்கில் ஓட்டு கேட்ட வேட்பாளர்
தெறித்து ஓடிய வாக்காளர்கள்
கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி, காங்., வேட்பாளராக கோபிநாத், நேற்று ஊத்தங்கரை சட்டசபை தொகுதிக்குட்பட்ட, 34 பஞ்.,களில், பிரசாரம் செய்தார். படப்பள்ளி, வெங்கடதாம்பட்டி பகுதிகளில் தெலுங்கு செட்டியார் சமூகத்தினர் குறிப்பிட்டளவு உளளனர். மற்றபடி தொகுதியில் தமிழ் பேசும் மக்களே அதிகம் வசிக்கின்றனர். ஆனால் இது தெரியாத காங்., வேட்பாளர் கோபிநாத் செல்லும் இடங்களில் எல்லாம் தெலுங்கில் பேசி ஓட்டு சேகரித்தார்.
தி.மு.க., கூட்டணி கட்சியினர் பொதுமக்கள் கூடிய இடங்களில், இவர் பேசிய தெலுங்கு வசனங்கள் எடுபடவில்லை. கூட்டத்தினரும் அவர் பேசியது புரியாமல் பாதியில் திரும்பி சென்றனர்.
வாசகர் கருத்து