காங்கிரசின் பலவீனமே எல்லை பிரச்னைக்கு காரணம்: பிரதமர் மோடி
"மக்களுக்குப் பணியாற்றவே நான் பிறந்துள்ளேன். அடுத்த 5 ஆண்டுகளில் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்கும் ஆட்சியாக இருக்கும். அதற்கு, லோக்சபாவில் பா.ஜ., பலப்பட வேண்டும்" என, பிரதமர் மோடி பேசினார்.
உத்தரகண்ட் மாநிலம் ருத்ராபூரில் பா.ஜ., ஏற்பாடு செய்திருந்த வாகனப் பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
கடந்த 10 ஆண்டுகளில் நாடு அடைந்த வளர்ச்சி என்பது டிரெய்லர் தான். இன்னும் நிறைய செய்ய வேண்டிய பணிகள் உள்ளன. விவசாயம், சுற்றுலா, தொழில் என உத்தரகண்டில் எப்போதும் இல்லாத அளவுக்கு வாய்ப்புகள் உருவாகி வருகின்றன.
நாட்டில் 3வது முறையாக பா.ஜ., ஆட்சி அமைந்தால் கலவரம் ஏற்படும் என்று காங்கிரசின் குடும்ப வாரிசுகள் தெரிவித்துள்ளனர். அவசர நிலை காலத்தின் மனநிலையில் இருக்கும் காங்கிரஸ், மக்களைத் தூண்டிவிட முயற்சி செய்கிறது. கர்நாடக காங்கிரஸ் தலைவர் ஒருவர், தென்னிந்தியாவில் இருந்து நாட்டை பிரிப்பது குறித்துப் பேசியிருக்கிறார்.
காங்கிரஸ் பலவீனமாக இல்லாமல் இருந்திருந்தால் நமது தேசத்தின் எல்லையில் கண்வைக்கும் துணிச்சல் யாருக்கும் வந்திருக்காது. கால்பதிக்க யாரும் துணிந்திருக்க மாட்டார்கள். கச்சத்தீவை எப்படி காங்கிரஸ் கொடுத்தது என்ற புதிய உண்மைகளே அதை வெளிப்படுத்துகின்றன.
ஊழலை ஒழிப்போம் என நான் சொல்கிறேன். ஊழல்வாதிகளைக் காப்பாற்றுங்கள் என அவர்கள் சொல்கிறார்கள். அவர்களின் முறைகேடுகளுக்கு எல்லாம் நான் பயப்படப் போவதில்லை. அவர்கள் என்னை மிரட்டுவதோடு அவதூறும் செய்கின்றனர். ஊழல்வாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும்.
மக்களுக்குப் பணியாற்றவே நான் பிறந்துள்ளேன். அடுத்த 5 ஆண்டுகளில் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்கும் ஆட்சியாக இருக்கும். அதற்கு, லோக்சபாவில் பா.ஜ., பலப்பட வேண்டும்.
இவ்வாறு மோடி பேசினார்.
வாசகர் கருத்து