தி.மு.க., - காங்., உடைந்த கண்ணாடி பசைபோட்டு ஒட்டி உள்ளனர்: பா.ஜ.,
கோவை: “இன்ஜினே இல்லாத வண்டி தான் விஜய்,” என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்தார்.
கோவையில் நேற்று அவர் அளித்த பேட்டி:
நாட்டின் வளர்ச்சியை தக்கவைத்துக் கொள்வதோடு மட்டுமல்ல. வேகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு துறைக்கு 42 சதவீதம் அதிகமாக, 7 லட்சத்து 84 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் மத்திய நிதி அமைச்சர்.
அருகில் உள்ள நாடுகள் ராணுவ தளவாட உற்பத்தியை பெருக்குவதால் ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உள்கட்டமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
பாராட்டுக்குரியது
தமிழக பட்ஜெட் நான்கு லட்சம் கோடி ரூபாய்க்கு போடப்படுகிறது. ஆனாலும், செலவினம் அதிகமாக உள்ளது. வாங்கிய கடனுக்கான வட்டியே அதிகமாக உள்ளது. உட்கட்டமைப்புக்கான தொகை மிகவும் குறைவாக உள்ளது. ஆனால் மத்திய அரசு, உட்கட்டமைப்புக்கான தொகையை உயர்த்திக் கொண்டே செல்கிறது. அதேபோல, சிறு குறு தொழில்கள் ஊக்குவிப்புக்கான தொகையையும் தமிழக அரசு குறைவாகவே அறிவித்து வருகிறது. இப்படி எல்லா விதத்திலும் மத்திய பட்ஜெட் பாராட்டுக்குரியதாகவே அமைந்துள்ளது.
பட்ஜெட்டில் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அமைச்சர் வாய்ப்பு கொடுத்துள்ளார். ஆனால், மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது, என ஸ்டாலின் கூறுவது அரசியல் செய்வதற்காக மட்டுமே.
அண்ணாதுரையை பிறந்த நாள், நினைவு நாளில் மட்டுமே தி.மு.க,வினர் நினைக்கின்றனர். தி.மு.க., அமைச்சர்களிடம் பேப்பரை கொடுத்து, அண்ணாதுரை குறித்து 10 வரி எழுத சொன்னால் எழுதத் தெரியாது.
அதிகாரம் இல்லை
தி.மு.க.,வினர் டப்பா இஞ்சின் போஸ்டரை முகத்தை மூடிக் கொண்டு போய் ஒட்டுகின்றனர். தி.மு.க.,வும், காங்.,கும் உடைந்த கண்ணாடி. அதை பசை போட்டு ஒட்டி உள்ளனர். இரண்டு கட்சிக்கும் இடையே என்ன நடக்கிறது என்பதே தெரியாது. மாநில காங்., தலைவருக்கு கட்சியில் இருப்பவரை சஸ்பெண்ட் செய்யும் அதிகாரம் கூட இல்லை.
விஜயிடம் இன்ஜின் இருப்பதாகவே தெரியவில்லை. அங்கே, இன்ஜின் இல்லாத வண்டியை ஸ்டார்ட் பண்ணுவதற்கு கூட ஆள் கிடையாது. ஆனால், அக்கட்சியினர் இன்ஜின் குறித்து பேசுகின்றனர். தமிழக நலனுக்கான எந்த விஷயமும் தெரியாமலேயே, நாட்டை ஆள விஜய் ஆசைப்படுகிறார்.
திருப்பரங்குன்றம் பிரச்சனையில் மாவட்ட கலெக்டர், போலீஸ் கமிஷனர் மன்னிப்பு கேட்டது மட்டும் போதாது, அதன் பின்னணியில் உள்ளவரையும் விசாரிக்க நீதிமன்றம் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement


வாசகர்கள் கருத்துகள் (0)