'பா.ஜ.,வுக்கு பயப்படுவதால் தான் தி.மு.க., போராட தயங்குகிறது'
ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளையாக இருந்து, இன்று பழனிசாமியின் செல்லப்பிள்ளையாக வலம் வருபவர். ஒற்றை தலைமை விவகாரத்தில் தனக்கு பக்கபலமாக இருந்ததால், எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி கொடுத்து, பழனிசாமி தன் பக்கத்திலேயே வைத்துக்கொண்ட நம்பிக்கைக்குரியவர். தினமும் தி.மு.க., அரசின் குறைகளை சுட்டிக்காட்டி அறிக்கை, பேட்டியாக கொடுத்து, தலைமையின் கவனத்தை ஈர்க்கும் ஆர்.பி.உதயகுமார் சிறப்பு பேட்டி:
அ.தி.மு.க., ஆட்சியிலும் சரி; தி.மு.க., ஆட்சியிலும் சரி; தென் மாவட்டங்கள் வளர்ச்சி பெறவே இல்லையே...
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தென் மாவட்டங்களில் மதுரை - துாத்துக்குடி தொழில் வழித்தடம் கொண்டு வந்தார். தொழிற்சாலைகள் அதிகம் வர மானியம் கொடுத்தார். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், கலெக்டர் மாநாட்டில் ஒரே நாளில் மூன்று கல்லுாரிகளுக்கு அனுமதி கொடுத்தார். தென் மாவட்டங்களில் அதிக கல்லுாரிகளை உருவாக்கினார். மனித ஆற்றல் உருவாக்க கவனம் செலுத்தினார். உலக முதலீட்டாளர்கள் மாநாடுகளில் தென் மாவட்டங்களில் தொழில் துவங்க முன்னுரிமை அளித்தார்.
மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் உட்பட ஒன்பது மாவட்டங்களை கொண்ட ஒரு மண்டலமாக உருவாக்கி, அதில் தொழில் துவங்குவோருக்கு பல்வேறு சலுகைகள் அளித்தார். முல்லை பெரியாறு அணையை 152 அடியாக உயர்த்த சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டார்.
இன்று ஐந்து மாவட்டங்களின் ஜீவாதாரம் காக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை எல்லாம் வானம் பார்த்த பூமி. அவை வளர்ச்சி பெற வேண்டும் என்ற தொலைநோக்கு திட்டத்தில், காவிரி - வைகை - குண்டாறு திட்டத்தை பழனிசாமி கொண்டு வந்தார்.
தமிழகத்தில் போதைப்பொருள் அதிகரித்துவிட்டது என்கிறீர்கள். உங்கள் ஆட்சியிலேயே அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்ததே?
சட்டசபையில் போலீஸ் மானிய கோரிக்கையின்போது போதைப்பொருள் கேந்திரமாக தமிழகம் உள்ளது என பழனிசாமி கூறிய பின், அன்றைய டி.ஜி.பி., சைலேந்திரபாபு 2.0, 3.0 என திட்டத்தை அறிவித்து, கஞ்சா வியாபாரிகளின் சொத்தை பறிமுதல் செய்ததாக தெரிவித்தார்.
பள்ளி, கல்லுாரி அருகில் விற்கப்படுவதை தடுக்க வேண்டும் என நாங்கள் சொன்னபோது, 'உங்கள் ஆட்சியில் செய்தீர்களா' எனக் கேட்கின்றனர். நீங்கள் தானே ஆட்சியில் உள்ளீர்கள்? அ.தி.மு.க., ஆட்சியில் நடந்ததாக சொல்லப்படும் விஷயம் நீதிமன்றத்தில் உள்ளது. இப்போது நடக்கும் விஷயத்திற்கு என்ன சொல்கிறீர்கள்?
தி.மு.க.,வில் பதவியில் இருந்து, போதைப்பொருள் கடத்திய ஜாபர் சாதிக்கிற்கு எப்படி இவ்வளவு சொத்து வந்தது? இன்னாருக்கு இவ்வளவு கொடுத்தேன் என்று அவரே சொல்கிறார். தேர்தல் பத்திரங்கள் வழியாக மாநில கட்சிகளில் தி.மு.க., தான் அதிகம் வாங்கியிருக்கிறது.
லாட்டரி அதிபர் மார்ட்டின் எந்த அடிப்படையில் தி.மு.க.,வுக்கு நிதி வழங்கினார்? போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் போலீஸ் துறையை தன் வசம் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் தான் பதில் சொல்ல வேண்டும்? மவுன சாமியாராக இருந்தால் எப்படி?
போதைப்பொருள் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினை ராஜினாமா செய்ய வேண்டும் என்கிறீர்கள். உங்கள் ஆட்சியில் குற்றச்சாட்டுக்கு உள்ளான விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வற்புறுத்தாதது ஏன்?
அது நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. அந்த வழக்கை காரணம் காட்டி, தி.மு.க.,வினர் தங்கள் தவறை நியாயப்படுத்த முடியாது. கட்சியில் பொறுப்பு வாங்கி தருவதாகக் கூறி, தன்னிடம் தி.மு.க., முக்கிய புள்ளி ஒருவர், 1 கோடி ரூபாய் வாங்கியதாக ஜாபர் சாதிக் கூறுகிறார். இதில் இருந்து, தி.மு.க.,வில் அதிகாரம் எந்தளவுக்கு துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிகிறது.
முல்லை பெரியாறு, மேகதாது, பாலாற்றில் அணை கட்டினால்கூட தி.மு.க.,வினர் வாய் திறக்க மாட்டேன் என்கின்றனர். 35,000 கோடி ரூபாய் கேட்டேன்; மத்திய அரசு தரவில்லை. நீதிமன்றம் செல்ல உள்ளோம் என்கிறீர்கள். 35,000 கோடி ரூபாய் பெற முடியாத உங்களுக்கு ஏன் 38 எம்.பி., பதவி? தமிழகத்தில் மக்களின் ஜீவாதார உரிமைகளை காக்க முடியாதவர்கள் ராஜினாமா செய்ய வேண்டியது தானே? பா.ஜ.,வுக்கு பயப்படுவதால் தான் தி.மு.க., போராடத் தயங்குகிறது. கொதித்தெழ வேண்டிய விஷயங்களில் எல்லாம் அமைதி காப்பதன் மர்மம் என்ன?
ஜாதி ஓட்டுக்காக 10 சதவீத வன்னியர் இட ஒதுக்கீடு அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. ஆனால், 2021 சட்டசபை தேர்தலில் அது கைகொடுக்கவில்லையே? அதனால் தான் இம்முறை பா.ம.க., கூட்டணியை தவிர்த்து விட்டீர்களா?
அதற்கும், இதற்கும் சம்பந்தமில்லை. அதிகாரத்தில் யார் இருந்தாலும் கோரிக்கை குறித்து பரிசீலித்து, சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுப்பர். அப்படி தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இது அரசின் கடமை. தேசிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என பழனிசாமி தெரிவித்துவிட்டார். காரணம், அக்கட்சிகள் மாநில உரிமை, தமிழர் உரிமைக்கு முக்கியத்துவம் தராமல் அலட்சியப்படுத்துகின்றன; புறக்கணிக்கின்றன.
கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் எதிர்த்து போராட தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக தேசிய கட்சிகள் தள்ளிவைக்கப்பட்டன. மற்ற எந்த கட்சிகள் வந்தாலும், நாங்கள் அரவணைத்து சிவப்பு கம்பளம் விரிக்க தயாராக உள்ளோம். பா.ம.க., தன் நிலைப்பாட்டில் ஒரு முடிவு எடுத்தால், அதற்கு எப்படி நாங்கள் பொறுப்பாக முடியும்?
கடந்த 2014 தவிர அண்மை காலத்தில் மதுரை தொகுதி, தி.மு.க., - கம்யூ., பிடியில் தான் இருக்கிறது. நீங்கள், செல்லுார் ராஜு உள்ளிட்ட வலுவான தலைவர்கள் இருக்கும்போது, ஏன் அந்த நிலையை மாற்ற முடியவில்லை?
மதுரை சட்டசபை தொகுதிகளில், 10க்கு 10; 10க்கு எட்டு இடங்கள் பெற்றிருக்கிறோம். லோக்சபா, மேயர் தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கிறோம். 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வின் பொய் பிரசாரத்திற்கு மத்தியில் ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்றோம். மற்ற தொகுதிகளில் நுாலிழையில் வெற்றி வாய்ப்பு பறிபோயின. மதுரையின் 10 தொகுதிகளிலும் நாங்கள் செல்வாக்காகத் தான் உள்ளோம். அவற்றில் மதுரை, தேனி, விருதுநகர் லோக்சபா தொகுதிகள் வருகின்றன. கடந்த தேர்தலில் தேனி தொகுதியில் அ.தி.மு.க., வெற்றி பெற்றதற்கு, உசிலம்பட்டி, சோழவந்தான் தொகுதிகளும் ஒரு காரணம்.
மதுரை தொகுதியில் கம்யூனிஸ்ட்கள் வலுவாக உள்ள காரணம் என்ன?
தி.மு.க.,வில் தொடர்ந்து மதுரையை கம்யூனிஸ்ட்களுக்கு ஒதுக்குகின்றனர். அப்படியானால் மதுரையில் தி.மு.க., பலவீனமாக உள்ளதா? பொதுவாக பலவீனமாக உள்ள தொகுதியை தானே கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க., ஒதுக்கும்? ஆனால், நாங்கள் இரட்டை இலையில் தொடர்ந்து போட்டியிட்டு வருகிறோம். கடந்த தேர்தலில் தோற்றுவிட்டோம் என்பதற்காக, இந்த தேர்தலில் வேறு யாருக்கும் தொகுதியை தள்ளிவிடலையே? இரண்டு அமைச்சர்கள் இருந்தும், ஏன் தி.மு.க.,வுக்கு மதுரையை ஒதுக்க வில்லை? ராமநாதபுரம் தொகுதியை நவாஸ் கனிக்கு முதல் ஆளாக தள்ளிவிட்டனர். அப்படியானால் அங்கு தி.மு.க., பலவீனமாக உள்ளதா?
மதுரைக்கு நிறைய பணிகளை செய்திருப்பதாக தற்போதைய எம்.பி., வெங்கடேசன் சொல்கிறார்; அது குறித்து புத்தகம்கூட வெளியிட்டுள்ளார். உண்மையிலேயே அவர் நன்றாக பணியாற்றி உள்ளாரா?
மக்கள் தீர்ப்பு சொல்வர். விளம்பர வெளிச்சத்திலேயே ஐந்து ஆண்டுகளாக இருந்துள்ளார். மக்களுக்கு பயன்படும் வகையில் பணியாற்றவில்லை. அது தேர்தலில் தெரியும்.
ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடும் நிலையில், அவரது பெயரில் அ.தி.மு.க., தலைமை சுயேச்சைகளை இறக்கி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக கூறப்படுகிறதே?
அதற்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும்? குழப்பத்தை ஏற்படுத்துவது யார்? இரட்டை இலையில் போட்டியிட்டு முதல்வரான பின், ஒரு 'சீட்'டிற்காக இரட்டை இலையை எதிர்த்து குழப்பம் ஏற்படுத்துவது அவர் தான். ஒரு வாரத்திற்கு முன் இரட்டை இலையில் போட்டியிடப் போவதாக கூறியவர், இன்று 'வாளி' கேட்கிறார். மூன்று முறை முதல்வராக இருந்தவர், இன்று ஒரு 'சீட்' பெற்று எந்த கோட்டையை பிடிக்கப் போகிறார்.
அமைச்சர், முதல்வர் பதவிகளையும், வாழ்வையும் தந்த இரட்டை இலைக்கு எதிராக போராடுவது நியாயமா? உங்களை நாட்டிற்கே ராஜாவாக்குகிறேன் என்று சொன்னால்கூட, எனக்கு வாழ்க்கை தந்த இரட்டை இலைக்கு எதிராக போராட முடியாது என்று சொல்லியிருக்க வேண்டாமா? இதுதானா உங்கள் விசுவாசம்?
பா.ஜ.,வுடன் அ.தி.மு.க.,வுக்கு கள்ள உறவு உள்ளதா?
எங்களுக்கு கள்ள உறவு வைக்க வேண்டிய அவசியமில்லை. என்.டி.ஏ., கூட்டணியில் எங்களுக்கு முக்கியத்துவம் இருந்தும், நாங்கள் வெளியே வரக் காரணம் மாநில வளர்ச்சி, தமிழர் உரிமை.
தி.மு.க., மீது ஊழல் வழக்கு, சி.பி.ஐ., வழக்கு, அமலாக்கத்துறை வழக்கு உள்ளதால், ஆட்சியை காப்பாற்ற புலியாக பாய்வதற்கு பதில் பூனையாக பதுங்குகிறது. எனவே, பா.ஜ.,வுடன் தி.மு.க., கள்ள உறவு வைத்திருப்பதாக மக்கள் சந்தேகப்படுகின்றனர்.
வாசகர் கருத்து