தி.மு.க.,விடம் சண்டை போட்டாவது தீர்ப்பேன்: அண்ணாமலை உறுதி

"கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு 1400 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியது. அவை முறையாகப் பயன்படுத்தப்பட்டதா என்பதைக் கண்காணிக்க, மா.கம்யூ., எம்.பி., தவறிவிட்டார்" என, கோவை தொகுதி பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்தார்.

அண்ணாமலை கூறியிருப்பதாவது:

10 ஆண்டுகால ஆட்சியில் ஏழை எளிய மக்களை வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருந்து மீட்டிருக்கிறோம். உலகப் பொருளாதாரத்தில், 11வது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறோம்.

தொழில் வளர்ச்சி, விவசாயம், இளைஞர்கள் மற்றும் பெண்கள் மேம்பாடு என, அனைத்துத் தரப்பினரும் முன்னேறும் திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறோம். நாட்டின் உட்கட்டமைப்பை பல மடங்கு மேம்படுத்தி இருக்கிறோம்.

வேகமாக வளரும் பொருளாதார நாடாக உயர்ந்திருக்கிறோம். தி.மு.க.,வின் 33 மாத கால ஆட்சிக்கு, நெகடிவ் மதிப்பெண் தான் கொடுக்க முடியும். ஆனால், 10 ஆண்டு கால நல்லாட்சியில், கொடுத்த அத்தனை தேர்தல் வாக்குறுதிகளையும் பிரதமர் நிறைவேற்றிவிட்டார்.

மக்கள் மத்தியில் நேர்மையாக, தைரியமாக மீண்டும் ஒரு வாய்ப்பு கேட்கிறோம். கோவையில் எப்போதும் மோடி அலைதான் வீசிக் கொண்டிருக்கிறது. வரும் லோக்சபா தேர்தல், வளர்ச்சிக்கான தேர்தல். அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகின் முதன்மை நாடாக இந்தியா மாறப்போகிறது.

நதி நீர் இணைப்பு உள்ளிட்ட 70 ஆண்டுகாலமாக, அரசியல் காரணங்களுக்காக எடுக்கப்படாத முக்கிய முடிவுகள், அடுத்த 5 ஆண்டுகளில் எடுக்கப்படும். எதிர்க்கட்சி வரிசையில் வலிமையான பிரதமர் வேட்பாளர் என்று யாரும் இல்லை. யார் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்க முடியாமல் எதிர்க்கட்சிகள் இருக்கின்றன.

கடந்த 20 ஆண்டுகளில், தி.மு.க.,வின் அலட்சியத்தால், கோவை தனது பொலிவை இழந்து நிற்கிறது. கோவையில் நீர்நிலைகள் வற்றிப் போகின்றன. சிறு குறு தொழில்முனைவோர்களுக்கு, தி.மு.க.,வால் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு 1400 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியது. அவை முறையாகப் பயன்படுத்தப்பட்டதா என்பதைக் கண்காணிக்க, மா.கம்யூ., எம்.பி., தவறிவிட்டார்.

கோவை மற்றும் பொள்ளாச்சி எதிர்கொள்ளும் பிரச்னைகளான திடக்கழிவு மேலாண்மை, கழிவு நீர் மேலாண்மை, நொய்யல் நதி சீரமைப்பு, விமான நிலையம், ரயில் நிலையம், பாலங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் என அனைத்தையும் நிறைவேற்ற, என்.டி.ஏ சார்பாக எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.

நொய்யல் நதியை சுத்தப்படுத்த, 970 கோடி ரூபாயை பிரதமர் வழங்கியுள்ளார். ஆனால், தி.மு.க., அரசு நொய்யல் நதியை சுத்தம் செய்துள்ளதா. அம்ருத் 2.0 திட்டத்தை, கலைஞர் நூற்றாண்டு திட்டம் என்று ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறார்கள்.

1980களில் தொடங்கிய வீரகேரளம் ஹவுசிங் போர்டு பிரச்னை மற்றும் பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு நிவாரணம் வழங்குதல் ஆகிய இரண்டு பிரச்னைகள் உள்ளன.

கடந்த 2009ம் ஆண்டு தொண்டாமுத்தூர் இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு தேர்தல் பிரசாரம் செய்த ஸ்டாலின், இதனை மூன்று மாதங்களில் தீர்ப்போம் என்றார். அவர் சொல்லி 15 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் தீர்வு கிடைக்கவில்லை.

நான் கோவை எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்ட உடன், தி.மு.க., அரசுடன் சண்டை போட்டாவது, இந்த இரண்டு பிரச்னைகளுக்கும் தீர்வைப் பெற்றுத் தருவேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்