ஆப்பரேஷன் ஆள் கடத்தல்!
தனக்கு கிடைக்க வேண்டிய பா.ம.க.,வை, பா.ஜ., பறித்து கொண்டதாக கொந்தளிப்பில் இருந்த அ.தி.மு.க., பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி; அந்த நிகழ்வு, அ.தி.மு.க.,வின் பிம்பத்திற்கு பங்கம் விளைவித்ததாகவே கருதுகிறார். அரசியலில் பிம்பம் முக்கியம் என்பதால், பா.ஜ.,வின் பிம்பத்தை சிதைப்பதற்கும் பலத்தை குறைப்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன் ஒரு அம்சம் தான் ஆள் கடத்தல் இழுப்பு உத்தி விளைவாக, பா.ஜ.,வில் இருந்த தடா பெரியசாமி, நேற்று, அ.தி.மு.க.,வில் இணைந்தார்.
தமிழக பா.ஜ.,வில் நடக்கும் விஷயங்களை அந்த கட்சியின் மேலிடம் கவனிக்கிறதோ இல்லையோ, பழனிசாமி உற்றுப்பார்த்து வருகிறார். தேர்தல் அறிவிப்பிற்கு முன் வரை ஓரளவிற்கு ஒத்திசையும் கட்சியாக தமிழக பா.ஜ., காட்சியளித்து வந்தது. தொகுதி பங்கீடு முடிந்ததுமே அதிருப்தி தலைதுாக்க துவங்கியது. வேட்பாளர் அறிவிப்புக்கு பின், பலருக்கு அதிருப்தி ஏற்பட்டதால் அவரவர் போக்கில் போகும் நிலை உருவானது.
இது பற்றி பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
பா.ஜ., தேசிய கட்சி என்பதால் இங்கு கோஷ்டி பூசல் அதிகம். இருந்தாலும், கட்சிக்காக உழைத்தால், 2024 லோக்சபா தேர்தலில் வாய்ப்பு கிடைக்கும் என, பலர் நம்பி இருந்தனர். இருப்பினும், இன்னாருக்கு கண்டிப்பாக சீட் கிடைக்கும் என கட்சியில் பேசிக்கொண்டவர்களுக்கு சீட் கிடைக்கவில்லை.
வேலை செய்தது வீண்
அதே நேரம், சீட் கிடைத்தவர்களில் சிலரும், தாங்கள் கேட்ட தொகுதி கிடைக்காததால் குழப்பத்தில் இருந்தனர். வாங்கிய சொக்காவை வேண்டிய ஆளுக்கு பொருத்தம் பார்க்காமல் போட்டுவிட்டனர். இது கட்சியில் ஒரு புது பேச்சை கிளப்பியது. 'யாருக்கு சீட் கொடுக்க வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்துவிட்டனர். நாம் வேலை செய்தது வீண்' என்பது தான் அது. இதனாலேயே, பலர், தேர்தல் பணியில் இருந்து சத்தமில்லாமல் ஒதுங்கிவிட்டனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த நிலையை சமாளித்து சமரசம் செய்துவைக்க பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலைக்கும் வாய்ப்பளிக்காத வகையில் கட்சி தலைமை அவரையும் தேர்தல் போட்டியில் இறக்கியது.
சந்தர்ப்பத்தை உணர்ந்த பழனிசாமி, ஆள் இழுப்பு வேலையை துவங்கி உள்ளார். அவரிடம் ஒரு பட்டியல் இருப்பதாக அ.தி.மு.க.,வினர் சொல்கின்றனர். அந்த பட்டியலில் உள்ளவர்களை ஒவ்வொருவராக அ.தி.மு.க.,விற்கு இழுக்க வேண்டும் என்று திட்டம் போட்டு இருக்கிறார். இந்த திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு, முன்னாள் பா.ஜ., தொழில்நுட்ப பிரிவு மாநில செயலரும் இந்நாள் அ.தி.மு.க., செய்தி தொடர்பாளருமான சி.டி.நிர்மல் குமாருக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.
இது பற்றி நிர்மல் குமார் கூறியதாவது:
கட்சி மாறி வந்தாலும் பா.ஜ.,வினர் பலரும் தொடர்பில் தான் உள்ளனர். நீண்ட காலம் கட்சிக்காக உழைத்து, சிதம்பரத்தில் சீட் எதிர்பார்த்த தடா பெரியசாமிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதும், என்னை தொடர்பு கொண்டார். பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்து விட்டார். இனி அவருக்கு எல்லாமே நல்லபடியாக நடக்கும். பா.ஜ.,வில் இருக்கும் தலைகள் பலரும் அடுத்தடுத்து அ.தி.மு.க.,வில் இணைவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
தன் கட்சி தாவல் முடிவு பற்றி தடா பெரியசாமி கூறியதாவது:
நான் வி.சி., கட்சியில் இருந்தவன். அங்கு நல்ல செயல்பாடுகள் இல்லாததால் பா.ஜ.,வில் இணைந்தேன். சிதம்பரம் லோக்சபா தொகுதியை குறி வைத்து பணியாற்றினேன். இம்முறை சீட் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால், என் வளர்ச்சி பிடிக்காத தலித் இன தலைவர் ஒருவர், எனக்கு சீட் கிடைக்காமல் செய்து விட்டார். தொகுதிக்கு சம்பந்தமில்லாத கார்த்திகாயினியை வேட்பாளர் ஆக்கினர். நடந்தது எனக்கு அவமானம்.
அதனால், பா.ஜ.,வை விட்டு விலகும் முடிவெடுத்தேன். நண்பர் நிர்மலை தொடர்பு கொண்டதும், உடனே அ.தி.மு.க., பொதுச் செயலரை சந்திக்க வைத்தார். நம்பிக்கையோடு பேசிய பழனிசாமி. வார்த்தைகளில் உறுதி தெரிந்தது. அ.தி.மு.க.,வில் இணைந்தேன். அ.தி.மு.க.,வுக்காக சிதம்பரம் தொகுதியில் பணியாற்ற வந்து விட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பழனிசாமி பட்டியலில், தடா பெரியசாமியை அடுத்து, வி.பி.துரைசாமி, 'கராத்தே' தியாகராஜன், அர்ஜுன மூர்த்தி உள்ளிட்டோரின் பெயர் இருப்பதாக அ.தி.மு.க.,வினர் கூறுகின்றனர்.
நெருக்கமான போட்டி
இவர்களை ஒவ்வொருவராக இழுத்தால், பா.ஜ., நம்பகத்தன்மை இல்லாத கட்சி, அங்கு உழைப்புக்கு மதிப்பு கிடையாது என்ற பிம்பத்தை உருவாக்கலாம்; அதே நேரம், அ.தி.மு.க., ஓட்டுக்கு போட்டிபோடும் பா.ஜ.,வின் தேர்தல் வேலைகளிலும் தடங்கல் விளைவிக்கலாம் என்பது பழனிசாமி கணக்கு.
இதன் வாயிலாக நெருக்கமான போட்டி இருக்கும் தொகுதிகளில் பா.ஜ.,வின் வேகத்தை மட்டுப்படுத்தலாம் என்று அ.தி.மு.க.,வினர் நம்புகின்றனர்.
வாசகர் கருத்து