உதயநிதியின் புது அறிவிப்பு: தேர்தல் கமிஷனில் அ.தி.மு.க., புகார்
"தேர்தல் விதிமுறைகளை மீறி நடைமுறையில் உள்ள திட்டத்தைப் பற்றி புது அறிவிப்பை வெளியிட்ட உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என, தேர்தல் கமிஷனில் அ.தி.மு.க., புகார் கொடுத்துள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் அ.தி.மு.க., வழக்கறிஞர் அணி சார்பில் புகார் 2 புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தி.மு.க., கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், தேர்தல் விதிகளை மீறி வேட்புமனு தாக்கலின்போது தன்னுடன் எம்.எல்.ஏ.,க்களை அழைத்துச் சென்றுள்ளார். இது தேர்தல் விதிமீறல் ஆகும்.
அவர்களுக்கு எந்தவிதமான உத்தரவும் பிறப்பிக்காமல் அதனை அனுமதித்த திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்து, ஆரணியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து கடந்த 26ம் தேதி விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பிரசாரம் செய்தார்.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டத்தைப் பற்றியும் புதிய திட்டங்களை பற்றியும் பேசக்கூடாது என்ற விதியை மீறி மகளிர் உரிமை தொகை தொடர்பாக அவர் ஓர் அறிவிப்பை வெளியிட்டு பிரசாரம் செய்திருக்கிறார்.
எனவே, உதயநிதி மீது தேர்தல் விதிமீறல் தொடர்பாக வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து