பா.ஜ.,வுடன் ராமதாஸ் கூட்டணி வைத்த மர்மம் என்ன: ஸ்டாலின் கேள்வி
"ஜக்கிய முற்போக்கு கூட்டணி எடுத்த சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க பா.ஜ., முட்டுக்கட்டை போட்டது. சாதிவாரி கணக்கெடுப்புக்கு உத்தரவாதம் தந்தது, காங்கிரஸ் கட்சி தான்" என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
தருமபுரியில் தி.மு.க., வேட்பாளர் மணியை ஆதரித்து, முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
நாட்டில் சமூக நீதியும் ஜனநாயகமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் முதலில் பா.ஜ., ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். சமூக நீதிக்கு சவக்குழி தோண்டும் கட்சியாக பா.ஜ., இருக்கிறது.
சமத்துவம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் கட்சி, பா.ஜ., அப்படிப்பட்ட பா.ஜ.,வை மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்கும் கடமை தமிழகத்துக்குத் தான் அதிகம் உண்டு.
கூட்டணி ரகசியம்
நான் அதிகம் நேசிக்கும் சமூகநீதி பேசும் ராமதாஸ் இப்போது எங்கே இருக்கிறார் என்பது உங்களுக்கே தெரியும். சமூகநீதிக்கு எதிரான பா.ஜ.,வுடன் ராமதாஸ் எப்படி கூட்டணி அமைத்தார் என்பது ரகசியம்.
அவர் ஏன் மனமே இல்லாமல் அங்கே போனார் என்பது அவர்களின் கட்சிக்காரர்களுக்குத் தெரியும். எங்களை பொறுத்தவரை மத்திய அரசு தான் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.
1969ல் முதன்முதலாக ஆதிதிராவிட மக்களுக்காக தனித் துறையை ஏற்படுத்தியவர், கருணாநிதி. பட்டியலின மக்களுக்கு 18 சதவீத இடஒதுக்கீடும் பழங்குடி இன மக்களுக்கு 1 சதவீத இடஒதுக்கீடு என முன்னேற்றத்துக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தவர், கருணாநிதி.
ராமதாஸ் சொன்னது என்ன?
வன்னிய மக்கள் தனி இடஒதுக்கீடு கேட்டு 1987ல் போராடினர். அ.தி.மு.க., ஆட்சியில் அதனைக் கொடுக்கவில்லை, 1989ல் கருணாநிதி முதல்வர் ஆனதும் வன்னியர் சமூகம் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட சமுகத்திற்கு 20 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கினார்.
கோனேரி குப்பத்தில் நடந்த வன்னியர் சங்க வெள்ளி விழாவில், 'இடஒதுக்கீடு தந்த கருணாநிதிக்கு, வன்னியர் சமுகம் நன்றிக்கடனாக இருக்கும்' என ராமதாஸ் தெரிவித்தார். சமுகநீதி பேசும் ராமதாஸ், சமுக நீதிக்கு எதிரான பா.ஜ.,வுடன் கைகோர்த்த மர்மம் என்ன?
பா.ம.க., வலியுறுத்தும் கொள்கைக்கு முற்றிலும் எதிரான கொள்கையை உடையது, பா.ஜ., இதனை ஜீரணிக்க முடியாமல் பா.ம.க.,வினர் உள்ளனர். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த பிரதமர் மோடி, ராமதாஸுக்கு உத்தரவாதம் தந்தாரா?
ஜக்கிய முற்போக்கு கூட்டணி எடுத்த சாதிவாரி கணக்கெடுப்புக்குக் கூட முட்டுக்கட்டை போட்டது, பா.ஜ., சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த உத்தரவாதம் தந்தது, காங்கிரஸ் கட்சி தான்.
தோல்வி பயத்தில் பா.ஜ.,
இதைச் சொன்னால், 'நீங்கள் ஏன் நடத்தவில்லை?' எனக் கேட்கின்றனர். இதற்கான அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது. மாநில அரசால் சர்வே மட்டுமே எடுக்க முடியும். இதெல்லாம் தெரிந்தே ராமதாஸ் அரசியல் செய்கிறார்.
பிரதமர் மோடி மாநிலங்களை அழிக்க துடியாய் துடிக்கிறார். மாநிலங்களுக்கு எந்த அதிகாரமும் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் சர்வாதிகாரி போல செயல்படுகிறார். நீங்கள் எஜமானர்கள் அல்ல, மக்கள் தான் உங்களுக்கு எஜமானர்கள்.
சிலிண்டர் விலையை குறைத்ததில் இருந்தே, நீங்கள் எப்படிப்பட்ட தோல்வி பயத்தில் இருக்கிறீர்கள் என்பது தெரிந்து விட்டது. பா.ஜ.,வை நேரடியாக விமர்சிக்காமல், எதிரானவர்கள் என வசனம் பேசுகிறார், பழனிசாமி. மோடி, அமித்ஷாவுக்கு பல்லக்கு துாக்கியவர் தான், பழனிசாமி.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
வாசகர் கருத்து