தி.மு.க., ஆட்சியால் தமிழக மக்கள் விரக்தி: பிரதமர் மோடி
"பெண்களை முன்னிறுத்தி செயல்பட வேண்டும் என்று நினைக்கும் அரசாக, நமது அரசு உள்ளது. உலகில் 3வது இடத்தை நோக்கி நமது பொருளாதாரத்தை கொண்டு செல்ல வேண்டும் என்பதே எங்கள் இலக்கு" என, பிரதமர் மோடி தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி, 'நமோ' செயலி வாயிலாக உரையாடினார். முன்னதாக, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பிரதமர் மோடி வெளியிட்டார்.
அதில், " எங்களின் கடின உழைப்பாளிகளாக விளங்கும் தமிழக பா.ஜ., தொண்டர்கள் உடனான 'எனது பூத் வலிமையான பூத்' உரையாடலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
தமிழகத்தில் உள்ள நமது தொண்டர்கள் நமது கட்சியின் நல்லாட்சி குறித்து மாநிலம் முழுவதும் திறம்பட பரப்பப்படுவதை உறுதி செய்வதும் மக்கள் மத்தியில் பணியாற்றுவதும் பாராட்டுக்குரியது.
தி.மு.க.,வின் தவறான ஆட்சியால் தமிழகம் விரக்தியடைந்து, எங்கள் கட்சியை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்நோக்குகிறது என்பது மறுக்க முடியாத உண்மை" எனப் பதிவிட்டிருந்தார்.
பின், 'நமோ' செயலி வாயிலாக பிரதமர் மோடி பேசியதாவது:
தமிழகத்தில் நீங்கள் சிறப்பாக உழைத்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் அனைவரின் உழைப்பும் தான் நம் கட்சியை வலுவாக முன்னெடுத்துச் செல்லும். 'எனது பூத் வலிமையான பூத்' என்ற முழக்கத்துக்கு உங்களின் உழைப்பு தான் காரணம்.
நமது வேட்பாளர்களும் தயாராகிவிட்டனர். நமது வாக்குறுதிகளும் தயாராகி வருகிறது. இந்த பரபரப்பான தேர்தல் நேரத்தில் உங்களை சந்தித்து பேச வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்தது.
சமீபத்தில் நான் தமிழகம் வந்திருந்தேன். அங்கு மக்கள் தந்த வரவேற்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. என்ன பாக்கியம் செய்தேன் எனப் பெருமை கொண்டேன்.
பா.ஜ., அரசு பெண்களை மையப்படுத்தி பல திட்டங்களை செய்து வருகிறது. மீண்டும் பா.ஜ., அரசு அமையும் போது எந்த மாதிரியான திட்டங்களை நாம் செய்ய வேண்டும் என்பது பற்றி மக்களிடம் கேளுங்கள்.
அறுவடை செய்த தானியங்களை காக்க குடோன் அமைக்க வேண்டும் என நீங்கள் கேட்பது சரி தான். தானியங்களைப் பாதுகாக்க 2 லட்சம் குடோன்களை அமைக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.
பெண்களை முன்னிறுத்தி செயல்பட வேண்டும் என்று நினைக்கும் அரசாக, நமது அரசு உள்ளது. உலகில் 3வது இடத்தை நோக்கி நமது பொருளாதாரத்தை கொண்டு செல்ல வேண்டும் என்பதே எங்கள் இலக்கு.
இவ்வாறு பிரதமர் பேசினார்.
வாசகர் கருத்து