'மோடி வேண்டாம்' என சொல்லும் தைரியம் இருக்கிறதா: பழனிசாமிக்கு உதயநிதி கேள்வி
"முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடந்தது. 2 நாள்களாக நடந்த இந்த ரெய்டு குறித்து பழனிசாமி வாய் திறந்தாரா?" என, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
திருவள்ளூரில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து, உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
சென்னை, திருவள்ளூர், நெல்லை, தூத்துக்குடி மக்களை பெரிதும் பாதித்த வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசிடம் 37 ஆயிரம் கோடி ரூபாயை பேரிடர் நிவாரண நிதியாக கேட்டோம். ஆனால், ஒரு ரூபாயைக் கூட மத்திய அரசு தரவில்லை.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநில அரசின் நிதியில் இருந்து 6 ஆயிரம் ரூபாயை ஸ்டாலின் கொடுத்தார். தேர்தல் பிரசாரத்தில், 'மோடி மீண்டும் பிரதமர் ஆகக் கூடாது' எனப் பேசி வருகிறோம். இதே வார்த்தையை சொல்வதற்கு அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு தைரியம் இருக்கிறதா.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் மாநில அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. இதைக் கண்டித்து அ.தி.மு.க., தலைமை அறிக்கை வெளியிட்டது. ஆனால், நான்கு நாள்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடந்தது. 2 நாள்களாக நடந்த இந்த ரெய்டு குறித்து பழனிசாமி வாய் திறந்தாரா?
மத்திய அரசின் வரவு செலவுகளை தணிக்கை செய்யும் அமைப்பாக சி.ஏ.ஜி., இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் சி.ஏ.ஜி கொடுத்த அறிக்கையின்படி, ஏழரை லட்சம் கோடி ரூபாய் எங்கே போனது எனத் தெரியவில்லை. ஒரு கி.மீ சாலைக்கு 250 கோடி ரூபாயை செலவு செய்ததாக கணக்கு காட்டியுள்ளனர்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இறந்துபோன 88 ஆயிரம் பேருக்கு ஒரே செல்போன் நம்பரை வைத்து பணத்தை எடுத்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகால பா.ஜ., அரசில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்தது. சி.ஏ.ஜி., அம்பலப்படுத்திய ஊழல் குறித்து தொடர்ந்து ஸ்டாலின் பேசி வருகிறார்.
ஐ.பி.எல்., போட்டிகளில் சென்னை அணி, டில்லி அணி, மும்பை அணி என இருப்பது போல அ.தி.மு.க.,விலும் பல அணிகள் இருக்கின்றன. இ.பி.எஸ்., அணி, ஓ.பி.எஸ்., அணி, சசிகலா அணி, தினகரன் அணி, ஜெ. தீபா அணி, மோடி அணி, அமித்ஷா அணி எனப் பல அணிகள் உள்ளன. இவர்களுக்கு தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் பதில் சொல்ல வேண்டும்.
ஜூன் 3 அன்று கருணாநிதியின் 101வது பிறந்தநாள். நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெறுவது தான் அவருக்கு நாம் கொடுக்கும் பரிசு. இதைவிட சிறந்த பரிசு வேறு எதுவும் இருக்க முடியாது.
இவ்வாறு உதயநிதி பேசினார்.
வாசகர் கருத்து