அச்சுறுத்துவது காங்கிரசின் பழைய கலாசாரம்: பிரதமர் மோடி விமர்சனம்
''பிறரை அச்சுறுத்துவதும் துன்புறுத்துவதும் காங்கிரசின் பழைய கலாசாரம்,'' என, பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் கவனத்துக்கு இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன்குமார் மிஸ்ரா, மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே உள்பட 600க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர்.
'அபாயத்தில் நீதித்துறை: அரசியல் மற்றும் தொழில்முறை அழுத்தங்களில் இருந்து நீதித்துறையைக் காத்தல்' என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
அரசியல் வழக்குகளில் குறிப்பாக ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள பிரமுகர்களின் வழக்குகளில் நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சி நடக்கிறது. இது நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை பாதிக்கக் கூடியவை. கடந்த காலம் சிறப்பானது என்ற தவறான கருத்தை உருவாக்கவும் ஒரு குழு முயற்சி செய்கிறது.
சில வழக்கறிஞர்கள், பகலில் அரசியல்வாதிகளை பாதுகாப்பவர்களாகவும் இரவில் சோசியல் மீடியாக்கள் மூலம் நீதிபதிகளுக்கு அழுத்தம் கொடுப்பவர்களாக இயங்குகிறார்கள். இதுபோன்ற செயல்கள், நீதிமன்றத்தின் சூழலை கெடுப்பதாக உள்ளது.
இதனை நீதிமன்றங்களின் கண்ணியத்தின் மீதான தாக்குதலாக தான் பார்க்க முடியும். இது போன்ற அழுத்தங்களில் இருந்து நீதித்துறையை காக்க வேண்டும். கடந்த சில வருடங்களாக இவை நடந்து வருவதால் அமைதி காப்பாற்கான நேரம் இது அல்ல.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூத்த வழக்கறிஞர்களின் கடிதம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார், பிரதமர் மோடி. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
மற்றவர்களை அச்சுறுத்தி தொல்லைகளைக் கொடுப்பது என்பது காங்கிரசின் பழைய கலாசாரம். 'உறுதியான நீதித்துறை வேண்டும்' எனக் கேட்டது காங்கிரஸ் தான். தங்களின் சுயநலனுக்காக வெட்கமே இல்லாமல் மற்றவர்களிடம் உறுதியை கேட்பதும் நாட்டின் நலன் என வரும்போது அதில் இருந்து விலகவும் செய்வார்கள். 140 கோடி இந்திய மக்களும் காங்கிரசை நிராகரித்ததில் ஆச்சர்யம் எதுவும் இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து