அடைக்கப்பட்ட கதவுகள்: வீட்டிற்கு செல்ல கெஞ்சிய பெண்கள்
காரைக்குடியில் நடந்த சிவகங்கை தொகுதி காங்., வேட்பாளர் கார்த்தி அறிமுக கூட்டத்தில் கதவை அடைத்து யாரையும் வெளியே செல்ல அனுமதிக்காததால் வீட்டிற்கு போக வேண்டும் என பெண்கள் கெஞ்சினர்.
காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் மஹாலில் வேட்பாளர் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், தமிழக அமைச்சர் பெரிய கருப்பன், கார்த்தி எம்.பி., மாங்குடி எம்.எல்.ஏ., தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மாலை 4:00 மணிக்கே பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள் அரங்கில் அமர வைக்கப்பட்டனர். கூட்டணி கட்சி நிர்வாகிகள் பேசினர். சிதம்பரம் பேச வந்தபோது இரவு 8:00 மணி. இதனால் பெண்கள் அவர் பேசுவதற்கு முன் புறப்பட்டனர். நிர்வாகிகள் உடனே, அரங்கின் அனைத்து கதவுகளையும் அடைத்தனர்.
வீட்டில் குழந்தைகள் தனியாக இருப்பதாகவும் வீட்டிற்கு செல்ல வேண்டும் எனவும் கோரி பெண்கள் கெஞ்சினர். நிர்வாகிகள் ஓரிருவரை மட்டும் வெளியே விட்டு விட்டு மீண்டும் கதவை மூடினர்.
மூதாட்டிகள் சிலர், 'நீங்கள் என்ன வண்டி வைத்தா எங்களை அழைத்து வந்தீர்கள். நீண்ட துாரம் நடந்து செல்ல வேண்டும். கதவை திறந்து விடுங்கள்,' என்றனர். ஆனால் நிர்வாகிகள் மறுத்ததால் நிகழ்ச்சி முடியும் வரை அவர்கள் காத்திருந்தனர்.
வாசகர் கருத்து