முஸ்லிம்கள் கறிவேப்பிலையா? தி.மு.க., தொண்டர் ஆதங்கம்

தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் பட்டியலில் ஒரு முஸ்லிம் பெயர் கூட இடபெறவில்லை. இதுதொடர்பாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த ரஹ்மத்துல்லா என்ற தி.மு.க.,தொண்டர் அறிவாலயத்திற்கு போன் செய்து அவரது ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஆடியோ பரவி வருகிறது.
அந்த ஆடியோ உரையாடலில், 'தளபதியின் நம்பிக்கையை பெற்ற உதவியாளர் பூச்சி முருகன் ஐயா அவர்களா?', என்று போன் செய்தவர் கேட்க, 'ஆம்' என்று பதில் வந்தது .
உடன் தொண்டர் ரஹ்மத்துல்லா, 'தி.மு.க.,வில் 21 வேட்பாளர்களில் ஒரு முஸ்லிம் கூட இல்லாதது ஒட்டுமொத்த சமுதாயத்தையும் மனவேதனையில் ஆழ்த்தியுள்ளது. 2019 தேர்தலில் உதயசூரியனை தலையில் வரைந்து தேர்தல் பணி செய்தவன் நான்.
ஒவ்வொரு முறையும் பா.ஜ.,வை காரணம் காட்டி முஸ்லிம் ஓட்டுகளை தி.மு.க., பெறுகிறது. முஸ்லிம் மக்களை குழப்பி, குழம்பில் போடும் கறிவேப்பிலையாக பயன்படுத்தி வருவது மனவேதனையாக உள்ளது' என்கிறார்.
அதற்கு பதில் அளித்த உதவியாளர் 'அமைப்பு செயலரிடம் பேசுங்கள்' எனக் கூறி இணைப்பை துண்டிக்கிறார். அதைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதியின் உதவியாளர் ஒருவரிடம் பேசும் தொண்டர், 'நான் பேசுவதை முதல்வரிடமும் உதயநிதியிடம் கொண்டு செல்லுங்கள்,' எனக் கூறி, 'ஒரு வேட்பாளர் கூட முஸ்லிம் இல்லாதது மிகுந்த மனவேதனை அளிக்கிறது' என தெரிவிக்கிறார்.
அதற்கு உதவியாளர் 'ராஜ்யசபாவில் அப்துல்லா, ராமநாதபுரத்தில் முஸ்லிம் வேட்பாளர் உள்ளனரே' என்கிறார்.
அதற்கு 'கூட்டணி வேறு, கட்சியில் பயணிக்கும் இஸ்லாமியர்களுக்கு வழங்கும் பங்களிப்பு என்பது வேறு. வடைக்கும், பஜ்ஜிக்கும் வேறுபாடு உள்ளது' என்கிறார்.
அதற்கு உதவியாளர், 'உங்கள் கருத்தை முதல்வரிடம், அமைச்சரிடமும் கொண்டு செல்கிறேன்' என்று கூறி இணைப்பை துண்டிக்கிறார். இப்போது இந்த ஆடியோ பரவிவருகிறது.
வாசகர் கருத்து