தர்மபுரியில் நடந்த 'கூவத்துார்' கும்மாளம்: பத்திரிகையாளர்களை வளைத்த தி.மு.க.,

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த பந்தாரஹள்ளி அருகே தனியார் ரிசார்ட் உள்ளது. இங்கு நேற்று முன்தினம், தர்மபுரி மாவட்ட தி.மு.க.,வினர் மற்றும் பத்திரிகையாளர்கள் பங்கேற்ற 'சண்டே பார்ட்டி' நடந்தது.

தர்மபுரி தி.மு.க., மாவட்ட செயலர்கள் பழனியப்பன், தடங்கம் சுப்பிரமணி, தர்மபுரி தொகுதி வேட்பாளர் மணி, அமைச்சர் பன்னீர்செல்வத்தின் உதவியாளர் தேவானந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இரவு 9:00 மணிக்கு துவங்கிய விருந்து, நள்ளிரவு வரை நீடித்துள்ளது.

அங்கு, தி.மு.க., மாவட்ட செயலர் பழனியப்பன் பேசியதாக, கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

தேர்தல் பணியில் கட்சியினர் தெரிந்தும், தெரியாமலும் சில தவறுகள் செய்வர். அதை நீங்கள் கண்டுக்கக் கூடாது; செய்தி வெளியிடக் கூடாது. உங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்கள் செய்வோம்.

தொகுதியில் கட்சியினரால் ஏதாவது பிரச்னை இருந்தால், எங்கள் கவனத்துக்கு கொண்டு வாருங்கள்; உடனடியாக சரி செய்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஸ்வீட் பாக்ஸ்



இந்த பார்ட்டியில், தி.மு.க.,வில் உள்ள அதிருப்தியாளர்கள், தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னணி பத்திரிகையாளர்கள் உட்பட, 45க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். கட்சி அதிருப்தியாளர்களுக்கு பெரிய தொகையும், பத்திரிகையாளர்களுக்கு தலா ஒரு ஸ்வீட் பாக்ஸ் மற்றும் 5,000 ரூபாயும் வழங்கப்பட்டுள்ளன. சைவம், அசைவத்துடன் மெகா மது விருந்தும் நடந்துள்ளது.

நம் நிருபருக்கு தகவல் கிடைத்த நள்ளிரவே, இது குறித்து தர்மபுரி கலெக்டரின் நேர்முக உதவியாளர் பொன்னரசு மற்றும் காரிமங்கலம் தாசில்தார் ரமேஷ் ஆகியோரை தொடர்பு கொண்டு விசாரித்தார்.

அதற்கு அவர்கள், 'இது குறித்து தகவல் வந்துள்ளது; பறக்கும் படையினரை அனுப்பியுள்ளோம்' எனக் கூறி சமாளித்தனர். ஆனால், நேற்று மாலை வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

விருந்து பின்னணி குறித்து, தி.மு.க., பிரமுகர் ஒருவர் கூறியதாவது:

தர்மபுரி லோக்சபா தொகுதியில், தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு தான் நேரடி போட்டியிருக்கும் என நினைத்து களத்தில் இருந்தோம். ஆனால், பா.ம.க., வேட்பாளராக சவுமியா அறிவிக்கப்பட்டவுடன், கள நிலவரம் தலைகீழாக மாறி விட்டது. சவுமியா பக்கம் காற்று வீசத் துவங்கி விட்டதாக அறிந்தோம்.

தமிழக உளவுத்துறையும் அதை தி.மு.க., தலைமைக்கு சுட்டிக்காட்டியது. அதன் பின் அமைச்சர் பன்னீர்செல்வத்தை அழைத்து பேசிய தலைமை, தர்மபுரி நிலவரம் கலவரமாக இருப்பதை சுட்டிக்காட்டி, 'வெற்றி பெற வேண்டும். வெற்றி பெற்ற பின் முதல்வர் ஸ்டாலினை சந்திக்கவும்' என உத்தரவிட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த பன்னீர்செல்வம், உள்ளூர் மாவட்ட செயலர்களை அழைத்து உத்தரவுகளை பிறப்பித்தார். வெற்றிக்காக எந்த எல்லை வரைக்கும் செல்லலாம் என அவர் கூறிய அறிவுரைப்படி, முதல் கட்டமாக கட்சியில் உள்ள அதிருப்தியாளர்கள், நகர முக்கிய பிரமுகர்கள், பத்திரிகையாளர்களுக்கு வலை விரிக்கப்பட்டு, அவர்கள் குளிர்விக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

போராட்டத்தில் குதிப்போம்



இது குறித்து, தர்மபுரி தொகுதி பா.ம.க., --- எம்.எல்.ஏ.,வும், தர்மபுரி மேற்கு மாவட்ட செயலருமான வெங்கடேஸ்வரன் கூறியதாவது:

தர்மபுரி லோக்சபா தொகுதி, பா.ம.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சவுமியாவுக்கு ஆதரவு அதிகரித்துள்ளதை அடுத்து, தி.மு.க.,வினர் ஆளுங்கட்சி என்ற போர்வையில் அட்டூழியம் செய்கின்றனர்.

கூவத்துார் சொகுசு விடுதியில் அ.தி.மு.க.,வினர் செய்ததை போல, தி.மு.க.,வினர் ரிசார்ட்டுக்கு பத்திரிகையாளர்களை அழைத்து சென்று பார்ட்டி நடத்தியுள்ளனர். இது குறித்து அதிகாரிகளுக்கு தெரிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

தி.மு.க.,வின் நான்காம் தர அரசியலால் பா.ம.க.,வினர் கொந்தளித்து போயுள்ளனர். மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் தெரிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அமைச்சர் பன்னீர்செல்வத்தின் வழிகாட்டுதலின்படி நடந்துள்ள பார்ட்டி குறித்து, உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், கட்சித் தலைமையின் அறிவுறுத்தலோடு போராட்டத்தில் குதிப்போம். இப்பிரச்னை தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கும் புகார் அனுப்புவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

காரிமங்கலம் - கம்பைநல்லுார் சாலையில், பந்தாரஹள்ளி அருகே அமைந்துள்ள அந்த ரிசார்ட்டில் தான், தர்மபுரிக்கு வரும் போதெல்லாம் மாவட்ட பொறுப்பு அமைச்சர் பன்னீர்செல்வம் தங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்