பா.ஜ., எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது : ஸ்டாலின்
''பா.ஜ.,வை எதிர்த்து பேச பழனிசாமிக்கு வாய்வரவில்லை. இவர் ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம் என சபதம் எடுக்கிறார்'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்
திருநெல்வேலியில், தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
தமிழகத்தை மதிக்கும் ஒருவர் பிரதமராகுவது மக்கள் கையில் தான் இருக்கிறது. பிரதமர் மோடியை தோற்கடிக்க வேண்டும். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால், அமைதியான இந்தியா, அமளியான இந்தியாவாக மாறிவிடும்.
பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒரு தாய் மக்களாக வாழும் மக்களை, வெறுப்பு விதைகள் துாவி நாசம் செய்துவிடுவார்கள். தேர்தல் வருவதால் அடிக்கடி தமிழகத்திற்கு மோடி வந்து சென்றார். தமிழக இயற்கை பேரிடர் பாதிப்புக்கு ஒரு பைசா கூட தரவில்லை. ஓட்டுகேட்டு வந்தபோது, மக்களுக்கு ஆறுதல் கூட சொல்லவில்லை.
மத்திய அரசு நிதி தராவிட்டாலும், மக்களுக்கு நாங்கள் உதவினோம். தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை மீட்பதற்கு 37,000 கோடி ரூபாய் கேட்டோம். மத்திய அரசு தரவில்லை. நாம் உரிமையோடு கேட்பதை தர மறுக்கும் மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போகிறோம்.
மத்திய நிதி அமைச்சர் நிதி வழங்கவில்லை. மாநில அரசு வழங்கினால், மக்களை பிச்சைகாரர்கள் என ஏளனம் செய்கிறார். தமிழக மக்களை பயங்கரவாதிகள் என இன்னொரு மத்திய அமைச்சர் கூறுகிறார்.
அரசு செலவு செய்யும் பணம் மக்களுடையது. மக்களின் கஷ்டத்தில் உதவுவது அரசின் கடமை. அதை கேட்பது மக்கள் உரிமை. மக்களாட்சியில் மக்களை அவமதித்தபோதே பா.ஜ., தோல்வி உறுதியாகி விட்டது.
தமிழர்கள் மீது ஏன் இத்தனை கோபம் வெறுப்பு. மக்களிடையே வெறுப்புகளை விதைத்து பிளவுகளை ஏற்படுத்தி குளிர் காய நினைக்கும் பா.ஜ., எண்ணம் ஒரு போதும் நிறைவேறாது. பா.ஜ.,வுக்கு வாக்களிப்பது அவமானம் என மக்கள் சொல்ல வேண்டும்.
எங்கள் வரிப்பணத்தில் 1 ரூபாய் தந்தால் 21 பைசா தான் திருப்பி வருகிறது. இதற்காவது பிரதமர் மோடி பதில் சொல்வாரா; இல்லை வாயில் வடை சுடுவாரா. தி.மு.க., மத்தியில் ஆட்சி செய்த கட்சி அல்ல, ஆட்சிகளில் பங்கேற்ற கட்சி, நாங்களே தமிழத்திற்கு எவ்வளவு சிறப்பு திட்டங்கள் கொண்டுவந்துள்ளோம்.
இந்திய வரலாற்றில் தமிழக மக்களை மோடி போல வெறுத்த, வஞ்சித்த பிரதமர் இது வரை கிடையாது. நீங்கள் வடிக்கும் கண்ணிரை உங்கள் கண்களே நம்பாது, மக்கள் எப்படி நம்புவார்கள்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு தி.மு.க.,-காங்கிரஸ் தான் காரணம் என்கிறார் மோடி. கடந்த 10 ஆண்டுகளாக யார் ஆட்சி நடக்கிறது. 3000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைதாகும் போது வேடிக்கை பார்த்தது உங்கள் ஆட்சி தான்.
சோனியாவை எப்படி வசை பாடலாம், ராகுலை பார்த்து பயப்படாத மாதிரி எப்படி நடந்து கொள்ளலாம் என்பது மோடியின் முழு நேர வேலையாக இருக்கிறது.
ஒரே மதம், ஒரே மொழி, ஒரே உணவு. ஒரே தேர்தல் என ஒரே பல்லவியை பா.ஜ., பாடிக்கொண்டிருக்கிறது.இதை அனுமதித்தால் ஜனநாயகம், சகோதரத்துவம், சமுகநீதியை பாதுகாக்கும் அரசியல் சட்டத்தை மாற்றி விடுவார்கள்.
இது பற்றி எந்த கவலையும் இல்லாமல் வளைந்த முதுகுடன் வலம் வருகிறார் பழனிசாமி. மோடி குறித்தோ பா.ஜ., குறித்தோ பேச பழனிசாமிக்கு தெம்பு இல்லை. கள்ள கூட்டணி நாடகத்திலும் மோடியை எதிர்க்க பழனிசாமிக்கு தைரியம் இல்லை.
பா.ஜ,வுக்கு எதிரான ஓட்டுக்களை பிரிக்க மறைமுகமாக இறக்கப்பட்டவர்கள் தான் பழனிசாமி அறிவித்த வேட்பாளர்கள்.
பழனிசாமி மீது மக்கள் மட்டுமின்றி அவரது கட்சி தொண்டர்களும் நம்பிக்கை இழந்து விட்டார்கள். திருச்சி பொதுக்கூட்டத்தில் பா.ஜ.,வை எதிர்த்து பேச பழனிசாமிக்கு வாய்வரவில்லை. இவர் ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம் என சபதம் எடுக்கிறார்.தமிழக மக்களின் கண்ணை குத்திய பழனிசாமி எடுப்பது சபதம் அல்ல வெற்று சவடால்.
இவ்வாறு அவர் பேசினார்
வாசகர் கருத்து