தேர்தல் அனுபவம் இல்லாத நிர்வாகிகள்: பா.ஜ., வேட்பாளர்கள் திணறல்
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ., 19 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதுதவிர கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மூன்று பேர் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். 1996ல் 37 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ., அதன்பின், இந்த தேர்தலில் அதிகபட்சமாக, 23 தொகுதிகளில் பா.ஜ.,வின் தாமரை சின்னம் களத்தில் உள்ளது.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை -- கோவை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் -- நீலகிரி, முன்னாள் கவர்னர் -தமிழிசை - தென் சென்னை, பா.ஜ., சட்டசபை குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் -- நெல்லை என முக்கிய நிர்வாகிகள் பலரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
சென்னை மாநகரின் மூன்று தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ., அருகில் உள்ள திருவள்ளூர் தனி தொகுதியிலும் போட்டியிடுகிறது. கொங்குமண்டலத்தில் நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் என நான்கு தொகுதிகளிலும் பா.ஜ., போட்டியிடுகிறது.
முக்கிய நிர்வாகிகள் வேட்பாளர்களாக இருப்பதாலும், அருகருகே உள்ள தொகுதிகளில் அதிகமாக போட்டியிடுவதாலும், தேர்தல் பணியாற்ற அனுபவம் வாய்ந்த நிர்வாகிகள் இல்லாமல், வேட்பாளர்கள் திணறி வருகின்றனர். இதனால் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடத்துவதில் கூட சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தென் சென்னையில் முன்னாள் மாநிலத் தலைவர், முன்னாள் கவர்னர் தமிழிசை போட்டியிடுவதால், வட சென்னை, மத்திய சென்னையில் உள்ள பா.ஜ., நிர்வாகிகள் பலர் தென் சென்னையில் வேலை செய்ய செல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் வட சென்னை, மத்திய சென்னை பா.ஜ., வேட்பாளர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதுபோல, கோவையில் மாநிலத் தலைவர் அண்ணாமலையும், நீலகிரியில் மத்திய இணை அமைச்சர் முருகனும் போட்டியிடுவதால் பொள்ளாச்சி, திருப்பூர் தொகுதியில் உள்ள பா.ஜ.,வினர் அங்கு தேர்தல் பணியாற்றி சென்று விட்டனர். இதனால், பொள்ளாச்சி, திருப்பூர் பா.ஜ., வேட்பாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளனர்.
வாசகர் கருத்து