நீலகிரியில் மோடிஜிக்கும் 2ஜிக்கும் தான் போட்டி: எல்.முருகன்
"மத்திய அமைச்சராக ஆ.ராஜா இருந்தபோது மிகப்பெரிய ஊழலை செய்தார், தமிழன் தலைகுனியும் அளவுக்கு ஊழல் செய்திருக்கிறார். உலகத்தில் இதுபோன்ற ஊழலை யாரும் செய்தது கிடையாது" என, நீலகிரி பா.ஜ., வேட்பாளர் எல்.முருகன் தெரிவித்தார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
கடந்த 10 ஆண்டுகளில் நாட்டை வலிமையானதாக பிரதமர் மோடி மாற்றிக்கொண்டிருக்கிறார். நாடு மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்து கொண்டிருக்கிறது. பிரதமரின் திட்டங்கள் அனைத்தும் மக்களிடையே சென்று சேர்கிறது.
எங்கள் லட்சியம் எல்லாம் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வல்லரசாக மாற வேண்டும் என்பது தான். மூன்றாவது முறையாக, 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மோடி வெற்றி பெறுவார்.
தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் பா.ஜ., வெற்றி பெறும். அந்த வெற்றியை பிரதமர் மோடிக்கு சமர்ப்பிப்போம். நீலகிரி தொகுதியை பொறுத்தவரை மக்கள் தர்மத்தை தான் எதிர்பார்க்கின்றனர். இங்கு, மோடிஜியா.. 2ஜியா என்ற சூழல் இருக்கிறது. 2ஜி ஊழல் வழக்கை நீதிமன்றம் கையில் எடுத்துள்ளது.
மத்திய அமைச்சராக ஆ.ராஜா இருந்தபோது மிகப்பெரிய ஊழலை செய்தார், தமிழன் தலைகுனியும் அளவுக்கு ஊழல் செய்திருக்கிறார். உலகத்தில் இதுபோன்ற ஊழலை யாரும் செய்தது கிடையாது.
நீலகிரி மக்கள் தலைகுனியும் சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறார். இப்படிப்பட்ட ஒருவரை ஏன் தேர்வு செய்தோம் என மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.
பா.ஜ., ஊழலுக்கு எதிரான ஆட்சியை நடத்தி வருகிறது. மோடியின் தமிழகம் வருகை, அண்ணாமலை யாத்திரையின் தாக்கம் ஆகியவை பா.ஜ.,வுக்கு பெரும் ஆதரவை தந்துள்ளது. அது, இந்த தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
லோக்சபா தேர்தலில் மோடி தான் ஹீரோ, அடுத்த 25 ஆண்டுகளில் நாடு வளர்ச்சியடைவதற்குத் தேவையான திட்டங்கள், எங்களிடம் உள்ளன. தி.மு.க.,வின் குடும்ப அரசியல் ஆட்சிக்கு எதிராக எங்கள் வியூகம் அமையும். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து