தி.மு.க., - அ.தி.மு.க., ஒன்று சேரும் : அண்ணாமலை கணிப்பு
"கோவையில் பணம் தராமல் ஜெயித்துக் காட்ட முடியும் என்று சொன்னேன். மக்கள் மீதுள்ள நம்பிக்கை தான் காரணம்" என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்
அண்ணாமலை கூறியதாவது:
பா.ஜ., 2019ல் அளித்த 295 வாக்குறுதிகளையும் நிறைவேற்றி இருக்கிறோம். 2024 தேர்தல் வாக்குறுதியில் என்ன சொல்லப்படுகிறதோ, அதையும் நிறைவேற்றப் போகிறோம். சொல்வதை செய்துவிட்டு இங்கு இருக்கிறோம்.
மோடியும் பா.ஜ.,வும் என்ன செய்திருக்கிறது என்று கோவையில் உள்ளவர்களுக்கு தெரியும். கோவையில் வளர்ச்சியை விரும்பாத கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி., இங்கு இருக்கிறார். மறுபுறம், கமிஷன் வாங்ககுவதற்கு மட்டும் பாலத்தைக் கட்டக் கூடிய கட்சி இருக்கிறது.
இவர்கள் கமிஷன் பெறுவதற்காக கோவையை நாசம் செய்துள்ளனர். என்னுடைய மோதல் வேட்பாளர்களுடன் அல்ல. 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பாக கோவையை எப்படி மாற்றப் போகிறோம் என்பது தான் முக்கியமானது.
கோவை மாவட்டத்துக்கு உண்மையான வளர்ச்சியைத் தருவதற்காக களமிறங்கியிருக்கிறேன். பழனிசாமி எதையும் முழுவதுமாக கேட்பதில்லை, கேட்கக்கூடிய தன்மையை அவர் இழந்துவிட்டார்.
கோவையில் பணம் தராமல் ஜெயித்துக் காட்ட முடியும் என்று தான் சொன்னேன். மக்கள் மீதுள்ள நம்பிக்கையால் இதைச் சொன்னேன். பா.ஜ.,வில் உள்ள தொண்டர்கள் யாரும் கான்ட்ராக்டர்கள் கிடையாது. தொண்டர்கள் கைக்காசை செலவு செய்து வேலை பார்க்கின்றனர். இது தான் மாற்று அரசியல்.
பழனிசாமி டீ குடிப்பதாக இருந்தாலும் மற்றவரிடம் காசு வாங்கித் தான் குடிப்பார் போல தெரிகிறது. நாங்கள் அப்படி இல்லை. சொந்தக் காசில் தான் குடிப்போம். மற்றவர்களுக்கும் எங்களுக்கும் இருக்கும் அடிப்படை வித்தியாசம் இது தான்.
செங்கல்லை கையில் எடுத்துப் பாருங்கள் என சொல்லும் அளவுக்கே உதயநிதியின் அறிவு இருக்கிறது. அரசியலில் பக்குவப்படாமல், மக்களுக்கு சமுதாய பணிகள் எதையும் செய்யாமல், தாத்தா மற்றும் அப்பாவின் இன்ஷியலில் அரசியலுக்கு வந்தால் இப்படித் தான் இருக்கும்.
அடுத்த மாதம் ஏப்ரல் 10ல் அ.தி.மு.க., -தி.மு.க., ஒன்று சேருவார்கள். அன்று பங்காளி கட்சிகளின் சுயரூபத்தை மக்கள் பார்ப்பார்கள். கொரேனாவில் சம்பாதித்த பணத்தை வைத்து பேசும் இவர்கள் என்ன மக்கள் தலைவர்களா?
அமைச்சராக இருந்து ஊழல் செய்து மக்கள் பணத்தை கொள்ளையடித்து தேர்தலின் போது செலவிட்டால், அது வளர்ச்சி இல்லை.. வீக்கம். ரஷ்யாவில் ஸ்டாலின் எப்படி இருந்தாரோ, அதேபோல் தமிழகத்திலும் ஸ்டாலினும் ஜனநாயகத்திற்கு எதிராக இருக்கிறார். ஜனநாயகம் பற்றிப் பேசுவற்கான தகுதி இல்லாதவர் ஸ்டாலின்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து